பட்ஜெட் 2018 தொடர்பான ரீயாக்ஷன் இங்கே தொகுத்து தரப்படுகிறது. பட்ஜெட்டுக்கான வரவேற்பு மற்றும் எதிர்ப்பு குறித்த விளக்கங்களை இங்கு காணலாம்.
பட்ஜெட் 2018, நரேந்திர மோடி அரசு 2019-ல் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பு முழுமையான இறுதி பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்திருக்கிறது. விவசாயம், கிராமப் பொருளாதாரம், சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட்ஜெட்டாக இதை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்திருக்கிறார்.
பட்ஜெட் 2018, கடந்த ஆண்டைப் போலவே ரயில்வே பட்ஜெட்டையும் உள்ளடக்கி அமைந்திருக்கிறது. மோடி அரசு தொடர்ச்சியாக அமைப்பு மாற்றங்களை செய்து வருவதாக தனது பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் அருண் ஜெட்லி குறிப்பிட்டார். இந்த பட்ஜெட் தொடர்பான ரீயாக்ஷன்களை இங்கே காணலாம்!
பிற்பகல் 3.15 : ‘முன்னேற்றத்திற்கும், நேர்மறையான இந்தியாவுக்குமான பட்ஜெட் இது’ என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
பிற்பகல் 2.30 : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‘நாட்டின் தலைநகரின் சில முக்கியமான உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடை நான் எதிர்பார்த்தேன். ஆனால் வழக்கம்போல டெல்லியை மாற்றாந்தாய் குழந்தையாக மத்திய அரசு நடத்தியிருக்கிறது’ என்றார்.
பிற்பகல் 2.17 : டெக்ஸ்டைல் துறைக்கு 7148 கோடி ஒதுக்கீடு செய்ததற்காக பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் ஜெட்லிக்கும் அந்தத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நன்றி தெரிவித்தார்.
பிற்பகல் 2.12 : மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிடுகையில், ‘இந்த பட்ஜெட், வெறும் ஏட்டுச் சுரைக்காய். கள நிலவரங்களுக்கு மாறானது’ என்றார்.
பிற்பகல் 1.30 : பிரதமர் மோடி, தனது அரசின் கடைசி பட்ஜெட்டை விவசாயிகளுக்கு தோழமையான பட்ஜெட் என வர்ணித்தார்.
பிற்பகல் 1.20 : பீகார் முதல்வரும், பாஜக.வின் கூட்டணி தலைவருமான நிதிஷ்குமார், பட்ஜெட்டை வரவேற்றார். கல்வி, சுகாதாரம், விவசாயம் தொடர்பான அறிவிப்புகளை வரவேற்ற அவர், ‘10 கோடி ஏழைக் குடும்பங்களை உள்ளடக்கும் தேசிய சுகாதாரத் திட்டம், பெரிய முன்னெடுப்பு’ என குறிப்பிட்டார்.
பகல் 12.47 : மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் கூறுகையில், ‘மாதச் சம்பளதாரர்களுக்கு மத்திய பட்ஜெட் பெரிய நிவாரணம் வழங்கியிருக்கிறது. ஒரே அளவான தொகையை வரிச் சலுகையாக (போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதிகளுக்கு ரூ40,000) அறிவித்திருப்பது 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இதற்காக பிரதமருக்கு நன்றி’ என்றார்.
பகல் 12.30 : காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா, ‘பட்ஜெட் உரையின் மூலமாக ஒரு அரசின் செயல்பாடுகளை பார்க்க முடியாது. நாட்டின் பொருளாதார நிலையை பார்க்கலாம். 30 ஆண்டுகளுக்கு பிறகு மெஜாரிட்டியாக ஆளும் வாய்ப்பை பெற்ற இந்த அரசு, அந்த வாய்ப்பை வீணாக்கிக் கொண்டிருக்கிறது. பண மதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் பலன் கொடுக்கவில்லை’ என்றார்.
பகல் 11.00 : நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய பட்ஜெட் 2018-ஐ தாக்கல் செய்தார்.