மத்திய பட்ஜெட்டை, பிரதமர் மோடி பசுமை பட்ஜெட் என்றும், மக்கள் நலனுக்கு ஏற்றது மற்றும் நாட்டின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பட்ஜெட் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 -2020ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தனிநபர் வருமான வரிவரம்பில் மாற்றமில்லை, பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி, பான் கார்டு தேவைப்படும் இடத்தில் ஆதார் எண் பயன்படுத்திக்கொள்ளலாம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன.
மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது, வளர்ச்சிக்கு உகந்த பட்ஜெட், விவசாய துறையில், மாற்றம் ஏற்படுத்த இந்த பட்ஜெட் வழிவகுக்கும். இந்த பட்ஜெட், இந்தியாவை 21ம் நூற்றாண்டிற்கு வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச்செல்லும். சுற்றுச்சூழல் மற்றும் பசுமை ஆற்றலுக்கு துணைபுரியும் பசுமை பட்ஜெட் இது. இதன்மூலம், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றல் மையமாக இந்த பட்ஜெட் விளங்குவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு : நாட்டின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றளவில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இந்த பட்ஜெட் அளித்திருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் விமர்சனம் : புதிய மொந்தையில் பழைய கள் என்று இந்த பட்ஜெட்டை, காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி இதுகுறித்து கூறியதாவது, பழைய வாக்குறுதிகளை திரும்ப திரும்ப கூறப்பட்டுள்ளன. புதிதாக இதில் எந்த விஷயமும் இல்லை. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.