மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மக்களையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 01) தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
‘பொருள் வரும் வழிகளை மென்மேலும் உண்டாக்கலும், வந்தவற்றைத் தொகுத்தலும், காப்பாற்றுதலும், காப்பாற்றியதைத் தக்கபடி வகுத்துச் செலவிடுதலும் ஆகியவற்றில் வல்லவனே அரசன்' எனபதே இந்தக் குறளின் பொருள்.’ திருவள்ளுவரின் இந்த குறளுக்கு இணங்கவே, மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்த திட்டங்கள் மற்றும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 11,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார். ரூ.1.03 லட்சம் கோடியில் தமிழகத்தில் 35,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன என்று கூறினார்.
நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் வகையில் சாலை வசதிகளை ஏற்படுத்த மத்திய பட்ஜெட்டில் ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையிலிருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பல விமான நிலையங்களிலும் பராமரிப்புப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களில் உள்ள வேளாண் உற்பத்தி விற்பனை மையங்கள் மூலமாக சிறப்பு கட்டமைப்பு நிதியம் மூலம் கடன் வசதி அளிக்கப்படும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் வரும் நிதியாண்டில் ரூ.1,75,000 கோடி ரூபாய் திரட்ட திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் சென்னையில் 118 கிமீ தொலைவு மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்.
சென்னை மீன்பிடித் துறைமுகம் விரிவுப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மேலும், சென்னை - சேலம் 8 வழிச்சாலை பணிகள் இந்த ஆண்டே தொடங்கும். 277 கி.மீ தொலைவு 8 வழிச்சாலை பணிக்காக மீண்டும் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.