2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது, 2014 முதல் மோடி அரசாங்கத்தின் 10 வது தொடர்ச்சியான பட்ஜெட் ஆகும்.
முன்னதாக இன்று காலை நாடாளுமன்றம் வந்த நிர்மலா, கடந்த ஆண்டைப் போலவே காகிதமில்லா வடிவில் பட்ஜெட் ஆவணங்களை சமர்ப்பிக்க, ஒரு டிஜிட்டல் டேப்லெட்டை’ பாரம்பரிய பஹி-கட்டா (Bahi Khata) பையில் வைத்து பாதுகாப்பாக எடுத்து வந்தார்.
இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான நிர்மலா, 2019 ஆம் ஆண்டில், பட்ஜெட் ஆவணங்களை பிரீஃப் கேஸில்-எடுத்துச் செல்லும் நீண்டகால பாரம்பரியத்தை கைவிட்டு, சிவப்பு நிற துணிப்பையான ‘பஹி-கட்டா’-வில் வைத்து எடுத்துச் சென்றார். அப்போது அவர் எதிர்க்கட்சிகளை கிண்டலடிக்கும் விதமாக, மோடி அரசாங்கம் “சூட்கேஸ் சுமந்து செல்லும் அரசாங்கம்” அல்ல என்று கூறியிருந்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்ய பிரீஃப்கேஸ் எடுத்துச் செல்வது என்பது பிரிட்டீஷ் மரபு. அதை உடைத்து சுதேசி இந்தியாவை குறிப்பிடும் வகையில், பஹி கட்டா பையில் வைத்து, பட்ஜெட் ஆவணங்களை எடுத்து செல்வதாக அப்போது நிர்மலா தெரிவித்தார். பாஹி-கட்டா என்பது பாரம்பரிய இந்திய வணிகர்களால் பராமரிக்கப்படும் கணக்கு புத்தகங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
அதைத் தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு, மத்திய பட்ஜெட் முதன்முறையாக காகிதமில்லா வடிவத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், மத்திய பட்ஜெட்டை அச்சிடுவதற்கு அமைச்சகத்தில் 100 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த செயல்முறை 15 நாட்கள் நீடிக்கும் மற்றும் காகிதங்கள் அச்சிடப்பட்டு, சீல் வைக்கப்பட்டு வழங்கப்படும் வரை ஊழியர்கள் ஒன்றாக இருப்பார்கள்.
ஆனால் கடந்தாண்டு கொரோனா பாதிப்பால், அரசாங்கம் காகித பட்ஜெட் வழக்கத்தை தவிர்க்க முடிவு செய்து, அதற்குப் பதிலாக காகிதமில்லா பட்ஜெட்டுக்கு மாறியது.
அதேநேரம், பட்ஜெட் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்களை எளிதில் தெரிந்து கொள்ள, பிரத்யேக – ”யூனியன் பட்ஜெட் மொபைல்” செயலியையும் அரசாங்கம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களுக்குக் கிடைக்கிறது. இதில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் தொந்தரவின்றி கிடைக்கும்.
சீதாராமனுக்கு முன், அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தின் போது பட்ஜெட் தாக்கல் தொடர்பான நீண்டகால பாரம்பரியம் உடைக்கப்பட்டது, அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பாரம்பரிய நேரமான மாலை 5 மணிக்கு பதிலாக காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அன்று முதல் அனைத்து அரசுகளும் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்து வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“