Budget 2022 Tamil News: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கிறார். மேலும், 2022-23 நிதியாண்டுக்கான (ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை) நிதிநிலை அறிக்கையை நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்கிறார்.
இன்று முதல் தொடங்க உள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி வருகிற 11ம் தேதியுடன் நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்கிறது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த நேரத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. அதே வேளையில், விவசாயிகள் பிரச்சினை, சீன ஊடுருவல், பெகாசஸ் மென் பொருள் மூலமான செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் போன்ற பிரச்சினைகளை இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பி அரசுக்கு குடைச்சல் கொடுக்க திட்டமிட்டுள்ளன. எனவே, இந்த பிரச்சினைகள் எழுப்பப்படும் போது விவாதங்கள் தொடரில் பெரும் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைப்போல விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப மேலும் பல கட்சிகள் திட்டமிட்டும் உள்ளன.
இந்தியாவில் நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலங்களவை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரையும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் ராஜ்யசபா தலைவர் எம்.வெங்கையா நாயுடு ஆகியோர், அமர்வின் போது அவைகள் சுமூகமாக செயல்படுவதை உறுதி செய்வதற்காக, அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தனித்தனியாக கூட்டங்களை நடத்துகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.