/indian-express-tamil/media/media_files/2025/02/01/ToC3sDuAWhCfvI1WWJHe.jpg)
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பிரதமர் மோடி (ஏ.என்.ஐ)
புடவையைத் தேர்ந்தெடுப்பது முதல் மாநிலத்திற்கான அறிவிப்புகள் வரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமையன்று மத்திய பட்ஜெட்டில் பீகார் தேர்தலை மையமாகக் கொண்டு பேசினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Budget bonanza for Bihar: How it may play out in poll-bound state
ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மஹாகத்பந்தனை தள்ளி வைத்து, இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் வெற்றி பெற பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) எதிர்பார்க்கும் நிலையில், நடுத்தர வர்க்கத்தினருக்கு விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் அறிவிப்புகள் முக்கியமானவை. ஆர்.ஜே.டி கட்சியின் முக்கிய இலக்குகளில் ஒன்று தேசிய ஜனநாய கூட்டணி அரசாங்கத்தின் நிர்வாக குறைபாடு மற்றும் வேலைகள் பற்றிய பிரச்சினை ஆகும்.
பா.ஜ.க கூட்டாளியான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதன் மற்ற என்.டி.ஏ கூட்டணி கட்சிகள் "இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் பட்ஜெட்டை வரவேற்றனர், இது "பீகாரின் பரந்த உணவு பதப்படுத்தும் திறனை" பயன்படுத்திக் கொள்ள அரசாங்கத்திற்கு உதவும்.
குறிப்பாக வலுவான என்.டி.ஏ பெல்ட்களாக இருக்கும் வடக்கு பீகார் மற்றும் மிதிலா பகுதியில் உள்ள திட்டங்களுக்கு பட்ஜெட் கவனம் செலுத்தியது. வட பீகாரில் பா.ஜ.க பாரம்பரியமாக சிறப்பாக செயல்படும் அதே வேளையில், கோசி மற்றும் மிதிலா பகுதிகளில் ஜே.டி(யு) சிறப்பாக செயல்படுகிறது.
நிர்மலா சீதாராமன் பீகாரின் மிதிலா பகுதிக்கும் தனது சேலை தேர்வு மூலம் ஒரு சமிக்ஞையை அனுப்பினார். மத்திய நிதியமைச்சர், மீன் உருவங்கள் கொண்ட மதுபானி கலை வடிவ அச்சுடன் கிரீம் நிற புடவை அணிந்திருந்தார். 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞர் துலாரி தேவி, முன்பு மதுபானிக்கு சென்றபோது நிர்மலா சீதாராமனுக்குப் புடவையைப் பரிசளித்ததாகவும், பட்ஜெட் தினத்தன்று அதை அணியுமாறு வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
பட்ஜெட்டில் இருந்து பீகாருக்கான சிறப்பம்சங்கள் இங்கே:
* மக்கானா வாரியம்: மக்கானா அல்லது நீர் அல்லிகளின் உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை மேம்படுத்த பீகாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. வாரியம் மக்கானா விவசாயிகளுக்கு பயிற்சி ஆதரவை வழங்கும் மற்றும் அவர்கள் தொடர்புடைய அரசாங்க திட்டங்களிலிருந்து பயனடைவதை உறுதி செய்யும்.
இந்தியாவில் மக்கானா உற்பத்தியில் பீகார் கிட்டத்தட்ட 85-90% பங்கு வகிக்கிறது மற்றும் இந்த நடவடிக்கை வடக்கு பீகார் மாவட்டங்களான தர்பங்கா, மதுபானி, சீதாமர்ஹி, சமஸ்திபூர், பூர்னியா மற்றும் கதிஹார் போன்ற விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* தேசிய உணவுத் தொழில்நுட்ப நிறுவனம்: மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உணவுப் பதப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகரிக்க பீகாரில் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்படும். "இது (1) விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களுக்கு மதிப்புக் கூட்டல் மூலம் வருமானத்தை அதிகரிக்கும், மற்றும் (2) இளைஞர்களுக்கு திறன், தொழில்முனைவு மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்" என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
* ஐ.ஐ.டி பாட்னா விரிவாக்கம்: நடுத்தர வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு சமிக்ஞையாக, இந்தியா முழுவதும் ஐ.ஐ.டி.,களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக ஐ.ஐ.டி பாட்னாவில் தங்கும் விடுதி மற்றும் பிற உள்கட்டமைப்பு திறன் விரிவாக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எஸ்.சி.,யில் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக 10,000 பெல்லோஷிப்கள் வழங்கப்படும். மேலும் 6,500 மாணவர்களின் கல்வியை எளிதாக்கும் வகையில் 2014-க்குப் பிறகு தொடங்கப்பட்ட ஐந்து ஐ.ஐ.டி.,களில் கூடுதல் உள்கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கும்.
* புதிய விமான நிலையங்கள்: பீகாரில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் அமைக்கப்படும் மற்றும் பாட்னா விமான நிலையம் விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் கூறினார், தவிர பாட்னா மாவட்டத்தின் டானாபூர் டென்ஷில் உள்ள பிஹ்தாவில் பிரவுன்ஃபீல்ட் விமான நிலையமும் மேம்படுத்தப்படும். கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் வளர்ச்சியடையாத நிலத்தில் கட்டப்படும் நிலையில், பிரவுன்ஃபீல்ட் விமான நிலையங்கள் முன்பு பயன்படுத்தப்பட்ட நிலத்தில் வருகின்றன.
* மேற்கு கோசி கால்வாய் திட்டம்: சுபால், சஹர்சா, மாதேபுரா, தர்பங்கா மற்றும் மதுபானியை உள்ளடக்கிய மிதிலாஞ்சல் பகுதியில் 50,000 ஹெக்டேர் நிலத்தை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடையும் மேற்கு கோசி கால்வாய் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
* பாரதிய பாஷா புஷ்டக் திட்டம்: இது டிஜிட்டல் வடிவில் பள்ளிகள் மற்றும் உயர் கல்விக்கான இந்திய மொழி புத்தகங்களை வழங்கும்.
* தேசிய சிறப்பு மையங்கள்: பீகார் மற்றும் மற்ற நான்கு மாநிலங்களும் திறன்கள், உலகளாவிய நிபுணத்துவம் மற்றும் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கான தேசிய சிறப்பு மையங்களைப் பெறும். ஒட்டுமொத்தமாக, மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் நாடு முழுவதும் 50,000 புதிய அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும், மேலும் இந்த நடவடிக்கையால் பீகார் பெரும் பயனடைய வாய்ப்புள்ளது.
இந்த அறிவிப்புகளை வரவேற்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில் பல சாதகமான அம்சங்கள் வரவேற்கப்படுகின்றன. வரவுசெலவுத் திட்டம் முற்போக்கானது மற்றும் முன்னோக்கியதாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தில் மக்கானா வாரியம் அமைப்பது உற்பத்தி மற்றும் செயலாக்கத்தை மேம்படுத்தும். பீகாரில் உள்ள விமான நிலையங்கள் சர்வதேச விமானங்களை அதிகரிக்கும், மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.
மேற்கு கோசி கால்வாய் திட்டத்திற்கு அனுமதி அளித்ததற்காக மத்திய அரசை பீகார் முதல்வர் பாராட்டினார். மிதிலாஞ்சல் பகுதியில் 50,000 ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு இது உதவும் என்றார்.
பா.ஜ.க.,வின் பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறுகையில், “இது பீகாருக்கு பெரிதும் பயனளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மாநிலத்தின் விரைவான வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளது. நிதியமைச்சர் மாநிலத்திற்கு பல திட்டங்களை அறிவித்தார்.”
பீகாரில் சிறப்பு கவனம் செலுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு ஜே.டி(யு) தேசிய செயல் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் குமார் ஜா நன்றி தெரிவித்தார். “மக்கானா வாரியம் வருவதால் மிதிலா பகுதி சிறப்பான ஊக்கத்தைப் பெறும். கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் மேலும் பல வழிகளில் மாநிலத்திற்கு உதவும். பேரழிவு தரும் வெள்ளத்திற்கு பெயர் பெற்ற கோசி பகுதி, மேற்கு கோசி கால்வாய் திட்டத்தின் காரணமாக பெரும் ஊக்கத்தை பெற்றுள்ளது,” என்று சஞ்சய் குமார் கூறினார்.
மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான் கூறுகையில், “வலிமையான தேசத்தை உருவாக்குவதற்கான சிறந்த சிந்தனையுடன் பட்ஜெட் அமைந்துள்ளது. பீகாரின் பரந்த உணவு பதப்படுத்தும் திறனுக்கு மக்கானா வாரியம் பெரும் ஊக்கத்தை அளிக்கும். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை பட்ஜெட் மேலும் குறைக்கிறது. திறன், உள்கட்டமைப்பு மற்றும் இளைஞர் சக்தியை மேலும் மேம்படுத்துவது குறித்து பட்ஜெட் பேசுகிறது,” என்றார்.
பீகாரில் அதிக கவனம் செலுத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்ததற்கு, சிராக் பாஸ்வான், “அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) பீகாரில் தேர்தலில் போட்டியிடக் கூடாது. பீகாரும் இந்த நாட்டின் ஒரு பகுதிதான், அதற்கு ஏதாவது கிடைத்திருந்தால், அதில் என்ன தவறு? ஐ.ஐ.டி, கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் சங்கிலிகளை உருவாக்குவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன ... இவை அனைத்தும் பீகார் இளைஞர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அதில் என்ன பிரச்சனை?” என்றார்.
பட்ஜெட் சமயங்களில் இந்தியாவில் எப்போதுமே சில தேர்தல்கள் நடந்துகொண்டே இருக்கும் என்று சிராக் பாஸ்வான் கூறினார். "எதிர்க்கட்சிக்கு பல ஆட்சேபனைகள் இருந்தால், அது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தை ஆதரித்து, விவாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அடுத்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதும், சில தேர்தல்கள் நடக்கலாம்,” என்றும் சிராக் பாஸ்வான் கூறினார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், ஆர்.ஜே.டி தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ், பட்ஜெட் "ஏழைகளுக்கு எதிரானது மற்றும் கிராமங்களுக்கு எதிரானது" என்று கூறினார்.
”பீகாருக்கான சிறப்பு அந்தஸ்து எங்கே? சிறப்புத் தொகுப்பு என்று சொல்லப்படும் திட்டம் பீகாரில் இதுவரை என்ன கொண்டு வந்தது? இந்த பட்ஜெட் வெறும் வாக்குறுதிகளின் மூட்டை. இது கிராமத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது” என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
கூடுதல் தகவல்கள்: பி.டி.ஐ
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.