நாடாளுமன்றத்தில் 2024-2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார். பல்வேறு துறை, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தார்.
அந்த வகையில் 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி தலைமையிலான என்.டி.ஏ அரசில் முக்கிய பங்கு வகிக்கும் ஆந்திராவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் பீகார் மாநிலங்களுக்கு கோடிக்கணக்கில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கவனம் பெற்று வருகிறது.
நிர்மலா சீதாராமன் பேசுகையில், ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை மேம்படுத்த ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பலதரப்பு நிதி நிறுவனங்களிடமிருந்து பணம் திரட்டப்பட்டு ஆந்திராவுக்கு வழங்கப்படும். அதே போல் விசாகப்பட்டினம் - சென்னை தொழில்பேட்டைக்கு கூடுதல் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படுகின்றன என்றார்.
தொடர்ந்து, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அனைத்து சுற்று வளர்ச்சிக்கும் பூர்வோதயா திட்டத்தை உருவாக்குவோம்,
பீகாரில் பல்வேறு சாலைத் திட்டப் பணிகளுக்காக ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பீகார் மாநிலத்தில் உள்ள கயா முதல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிஸ்தர் வரை புதிய பொருளாதார வளர்ச்சி திட்டம் கொண்டுவரப்படும் என்று கூறினார்.
கிழக்கு மாநிலங்களின் அனைத்து சுற்று வளர்ச்சிக்கான பூர்வோதயா திட்டத்தின் ஒரு பகுதியாக, நிர்மலா சீதாராமன் பீகாரில் குறிப்பிடத்தகுந்த திட்டங்கள் பற்றி பேசினார். பலதரப்பு மேம்பாட்டு முகமைகளின் உதவி மூலம் பீகாருக்கு நிதி உதவி ஏற்பாடு செய்யப்படும் என்றார். பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு நிதியுதவி வழங்கும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“