2023-24 நிதியாண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 31) காலை 11 மணிக்கு தொடங்குகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் முதல் முறையாக உரையாற்றுகிறார். நாளை (பிப்ரவரி 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
முன்னதாக நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது. அப்போது, அதானி நிறுவனத்தின் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை, குற்றச்சாட்டு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பி.பி.சி ஆவணப்படம் ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர், அரசு விதிகளின்படி ஒவ்வொரு பிரச்சினையையும் விவாதிக்க தயாராக இருப்பதாக கட்சிகளுக்கு உறுதியளித்தார். மேலும், கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவை பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறின. அனைத்துக் கட்சி கூட்டத் தொடரில் காங்கிரஸில் யாரும் பங்கேற்கவில்லை. ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர்கள் ஸ்ரீநகர் சென்றனர். ராஜ்நாத் சிங் தவிர, அரசு தரப்பில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி,
பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் வி. முரளீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 27 கட்சிகளைச் சேர்ந்த 37 தலைவர்கள் கலந்து கொண்டதாக ஜோஷி கூறினார்.
காங்கிரஸுக்கு அடுத்தபடியாக நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், அதானி விவகாரத்தில் விவாதிக்கக் கோரி மற்றவர்களுடன் சேர்ந்த கூறவில்லை. தி.மு.கவின் டி.ஆர் பாலு, ஆம் ஆத்மி கட்சி (சஞ்சய் சிங்), ஆர்ஜேடி (மனோஜ் குமார் ஜா), சிபிஎம் (எளமரம் கரீம்) மற்றும் சிபிஐ (பி சந்தோஷ் குமார்) ஆகியோர் அதானி மீதான குற்றச்சாட்டை விவாதிக்க வேண்டும் என்று கோரினர்.
அமெரிக்க முதலீட்டாளர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கைக்கு பதிலளிக்கையில் அதானி இந்தியாவின் பெயரையும் கொடியையும் பயன்படுத்து குறித்து ஜா கேள்வி எழுப்பினார்.
கொல்கத்தாவில் கூடிய சிபிஎம் மத்தியக் குழு, குற்றச்சாட்டுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தினசரி கண்காணிக்கப்படும் உயர்மட்ட விசாரணையைக் கோரியது. இப்பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்ப மற்ற கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டம், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், விலைவாசி உயர்வு, குறிப்பாக எரிபொருளின் விலை உயர்வு ஆகியவை குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று டிஎம்சி கோருகிறது என்று அக்கட்சி எம்.பி பந்தோபாத்யாய் கூறினார். நாடாளுமன்றத்தின் தளத்தை மசோதாக்களை நிறைவேற்ற மட்டும் பயன்படுத்தக் கூடாது என்று நான் அரசிடம் கூறினேன். எதிர்க்கட்சிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும். சபை எதிர்க்கட்சிக்கு சொந்தமானது என்பது பழமொழி, ஆனால் அது இந்த அவையில் பிரதிபலிக்கவில்லை ”என்று அவர் கூறினார்.
2002 கலவரத்தை மோடி தலைமையிலான குஜராத் அரசு கையாண்டது பற்றி பேசிய பிபிசி ஆவணப்படம் குறித்த கட்சியின் நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, அங்கிருந்த பலர் அதன் மீதான தடைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறியதாக டிஎம்சி தலைவர் கூறினார்.
ஹிண்டன்பர்க் அதானி குழுமத்திடம் 88 கேள்விகளை முன்வைத்தது. அதற்கு அதானி குழுமம் 413 பக்கங்களில் பதிலளித்தது. ‘என் மீதான தாக்குதல் இந்தியா மீதான தாக்குதல்’ என்று தேசியவாதத்தின் போர்வையில் ஒளிந்து கொள்வது ஏன்? இதற்கிடையில், எல்ஐசி மற்றும் எஸ்பிஐ குழும நிறுவனங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. செபி/ஆர்பிஐ மௌனம் காக்கிறது" என்று காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. விதிகளின்படி அனைத்து விஷயங்களிலும் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. கூட்டத்தொடர் சுமூகமாக செயல்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உயிரியல் பன்முகத்தன்மை திருத்த மசோதா, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு & நலன் திருத்த மசோதா, குழந்தை திருமண தடை திருத்த மசோதா, மின்சார திருத்த மசோதா, மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, ஜன் விஸ்வாஸ் விதிமுறைகள் திருத்த மசோதா. இவை தவிர 17 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
நிலுவையில் உள்ள இந்த சட்டத்திருத்ததில் கூட்டத்தொடரின் போது எவை நிறைவேற்றப்படுகிறது என்பது குறித்து அரசு தெளிவுபடுத்தவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.