Budget session 2022
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம், வெறும் 10 அமர்வுகளுடன் சுருக்கமாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மீண்டும் சோதிக்கும் என்று தெரிகிறது. ஏன் என்றால் இந்த எதிர்க்கட்சியினர் ஐந்து மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட உள்ளனர்.
குளிர்கால கூட்டத்தொடரின் போது ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூட்டிய எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டங்களில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் விலகி இருந்தது. ஆனால் இடைக்கால நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்களுக்கு ஆதரவாக காந்தி சிலை முன்பு நடத்தப்பட்ட தர்ணாவில் தொடர்ந்து தன்னுடைய ஆதரவை வழங்கி முக்கிய பங்காற்றியது அக்கட்சி.
காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான உறவு மேலும் மோசம் அடைந்து வருகிறது. சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அனுப்பிய தேர்தல் புரிந்துணர்வு கடிதத்திற்கு காங்கிரஸ் கட்சி செவிசாய்க்காதது இக்கட்சிகளின் உறவை மேலும் விரிவடைய செய்தது. காங்கிரஸ் கட்சியினரை தன் பக்கம் ஈர்த்த காரணத்திற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது அதிருப்தியில் உள்ளது காங்கிரஸ் கட்சி.
அதே போன்று கோவாவில் தொகுதி பங்கீட்டில் சிவசேனா மற்றும் என்.சி.பி. கட்சிகளை சேர்த்துக் கொள்ளாத காரணத்தாலும் காங்கிரஸ் கட்சி மீது இவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மோதுகின்றன. பஞ்சாபில் ஆளும் காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது.
இப்போது இருக்கும் நிலைமையைக் கருத்தில் கொண்டால், விவசாய போராட்டங்கள் தொடர்பாக, குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்து இரு அவைகளிலும் ஒன்றிணைந்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரச்சனையை எழுப்பியது போன்று இம்முறை அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவார்களா என்பதில் காங்கிரஸ் கட்சியினர் பலருக்கும் சந்தேகம் நிலவி வருகிறது.
இருந்தாலும் ஒரே மன ஓட்டம் கொண்ட கட்சியினரை காங்கிரஸ் கட்சி அணுகி அரசாங்கத்தை விமர்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வியூகக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்பப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் இணைந்து செயல்படவும், விவசாய நெருக்கடி, சீன ஊடுருவல்கள், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி மற்றும் ஏர் இந்தியா விற்பனை போன்ற பல்வேறு விசயங்கள் குறித்த விவாதங்களை எழுப்பவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் சோனியா, கார்கே தவிர, மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை காங்கிரஸ் துணை தலைவர் ஆனந்த் ஷர்மா, மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, கே.சி. வேணுகோபால் மற்றும் மனீஷ் திவாரி, ஜெயராம் ரமேஷ், கவுரவ் கோகாய், கோடிக்குன்னில் சுரேஷ், மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
மறுபுறம், இந்த அமர்வின் போது மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவதாக குற்றம்சாட்டி வருகிறது திரிணாமுல் காங்கிரஸ். ஐ.ஏ.எஸ் கேடர் விதிகளில் மத்திய அரசு முன்வைத்துள்ள திருத்தங்கள் குறித்தும் இதில் கேள்வி எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. பிப்ரவரி 1ம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. . கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11-ம் தேதி நிறைவடையும். இரண்டாவது பகுதி மார்ச் 14-ம் தேதி, 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு நான்கு நாட்கள் கழித்து, துவங்கிஏப்ரல் 8-ம் தேதி நிறைவடையும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.