திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணியை வழிநடத்தும் வாய்ப்பைக் கொடுத்தால், கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன் என்று காங்கிரஸ் கட்சியை குறிவைத்து கூறியது, கூட்டணிக்குள் ஏற்கனவே அதிருப்திகளை எதிர்கொண்டு வரும் பழம்பெரும் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சிறிது தூரம் தள்ளி உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Buffeted by debacles, INDIA bloc totters as Congress braces for winter of discontent
உத்தவ் பிரிவு சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான தலைவரான மிலிந்த் நர்வேக்கர், பாபர் மசூதியை இடித்தவர்களை நினைத்து பெருமைப்படுவதாக சிவசேனா நிறுவனர் மறைந்த பால்தாக்கரே 1992 ஆம் ஆண்டு கூறிய மேற்கோளுடன் பாபர் மசூதி இடிப்பு படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் மகா விஹாஸ் அகாடி (MVA) கூட்டணியில் இருந்து வெளியேற சமாஜ்வாதி கட்சி (SP) முடிவெடுத்திருப்பது இந்தியா கூட்டணியில் குழப்பத்தை அதிகரிக்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர், இதுபோன்ற பதிவுகள் "தவிர்க்கக்கூடியவை" என்று கூறினார், ஆனால் "கூட்டணியில் இதுபோன்ற கருத்தியல் முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை" என்றும் கூறினார். மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.வி.ஏ தோல்வியடைந்ததைக் கருத்தில் கொண்டு, உத்தவ் சிவசேனாவிலும் ஒரு குழப்பம் நிகழ்கிறது என்று அவர் கூறினார். "நாங்கள் அனைவரும் தோல்வியை சந்தித்தோம்... ஒருவேளை இந்துத்துவாவுக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தவ் சிவசேனா நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இதுவரை அதற்கான உறுதியான அறிகுறி எதையும் நாங்கள் காணவில்லை,'' என்றார்.
காங்கிரஸின் மத்திய தலைமை, உத்தவ் சிவசேனாவின் (UBT) நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது, ஆனால் சில சமயங்களில் உள்ளூர் அரசியலின் தேவைகள் சில பிராந்திய கட்சிகளை சில கருத்தியல் அல்லது தேர்தல் நிலைப்பாடுகளை எடுக்க நிர்பந்திக்கக்கூடும், இது ஒரு "நெருக்கடியாக" வந்தாலும், ஒரு தேசிய கூட்டணியான இந்தியா கூட்டணியை குறைமதிப்பிற்கு உட்படுத்தாது என்று காங்கிரஸ் கருதுகிறது.
“லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.,வை எதிர்த்துப் போராடுவதற்காக நாங்கள் இந்தியா கூட்டணியை அமைத்தோம். நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடர்கிறோம். ஆனால் மாநில தேர்தல்களில் சில கட்சிகள் ஒன்றுக்கொன்று எதிராக சண்டையிட்டுக் கொள்கின்றன. நாங்கள் கேரளாவில் சி.பி.எம் கட்சிக்கு எதிராக களமிறங்குகிறோம்.; சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக களமிறங்குகின்றன; நாங்கள் டெல்லியில் ஆம் ஆத்மிக்கு எதிராகப் போட்டியிடுகிறோம். அதனால் இதுபோன்ற முரண்பாடுகள் இருக்கின்றன. கருத்தியல் வேறுபாடுகளும் உள்ளன, ஆனால் தேசிய அளவில் பா.ஜ.க.,வை எதிர்த்துப் போராடுவதே பெரிய குறிக்கோள்,” என்று ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் கூறினார்.
மம்தாவின் கருத்துக்களுக்கு இடையில், இந்தியா கூட்டணியின் உண்மையான தலைவரான காங்கிரஸ் கட்சி, மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்குப் பிறகு, குறிப்பாக ஹரியானா மற்றும் மகாராஷ்டிர தேர்தல்களில் தோல்வியடைந்ததை அடுத்து, கூட்டணியின் செயல்பாட்டின் மீது அழுத்தத்தில் உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் போராட்டங்களில் இருந்து சமாஜ்வாதி (SP), தேசியவாத காங்கிரஸ் ஷரத் பிரிவு (NCP (SP)) போன்ற கட்சிகள் ஒதுங்கியிருக்கும் நேரத்தில் மம்தாவின் கருத்து வந்துள்ளது. மற்ற சில இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் எதிர்கட்சியை ஒரு விஷயத்தில் மட்டும் நிலைநிறுத்தக் கூடாது என்று நினைக்கிறார்கள்.
அது மட்டுமல்ல. இந்தியா கூட்டணி இப்போது பெரும்பாலும் "ஊடகங்களில் மட்டுமே" இருப்பதாக சமாஜ்வாதி கட்சி கருதுகிறது. மறுபுறம், சி.பி.ஐ பொதுச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், இடதுசாரிக் கட்சிகள் கூட்டணியில் இடம் பெறவில்லை, ஏனெனில் அவை இடப் பங்கீட்டின் போது பெரிய கட்சிகளாக இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
காங்கிரஸ் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று டி.ராஜா கூறுகிறார்.
இந்த வார தொடக்கத்தில், உத்தவ் சிவசேனாவும் (UBT), காங்கிரஸை சுயபரிசோதனை செய்து எதிர்க்கட்சி ஒற்றுமைக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது, இது வரவிருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்ற ஆம் ஆத்மியின் அறிவிப்பைக் குறிப்பிடுகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி காங்கிரஸை தூரத்தில் வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கிறார். இப்போது (ஆம் ஆத்மி தலைவர்) கெஜ்ரிவாலும் அதே பாதையில் செல்கிறார். இது காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து (எதிர்க்கட்சி) ஒற்றுமைக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய ஒரு விஷயம்,” என்று உத்தவ் சிவசேனா (UBT) பத்திரிக்கையான சாம்னாவின் தலையங்கம் செவ்வாயன்று கூறியது.
மம்தாவின் கருத்து குறித்து காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. “பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. நாங்கள் அவர்களிடம் கேட்டால், இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இல்லை என்று அவர்களின் தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் கூட்டணிக்கு தலைமை தாங்க தயாராக இருப்பதாக மம்தா கூறுகிறார்” என்று கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார். “காங்கிரஸால் இதைப் பற்றி எந்த கருத்தையும் எடுக்கவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ முடியாது. இந்த விவகாரங்கள் அனைத்தும் கூட்டணியில் விவாதிக்கப்பட வேண்டும்” என்று அந்த தலைவர் கூறினார்.
காங்கிரஸும் மற்ற சில இந்தியா கூட்டணி கட்சிகளும் எச்சரிக்கையாக இருந்த நிலையில், மம்தாவின் அறிக்கைக்கு தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சமாஜ்வாதி கூறியது.
சமாஜ்வாதி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் உதவீர் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்: “மம்தா பானர்ஜி ஒரு மூத்த தலைவர், அவருடைய தலைமையிலும் அவரது போராட்டத்திலும் நாங்கள் திருப்தி அடைகிறோம். எங்களுக்கு ஆட்சேபனை இருக்க முடியாது. ஆனால் அதை இந்தியா கூட்டணி தலைவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மம்தா கூட்டணியில் இன்னும் சுறுசுறுப்பாகவும், நல்ல பதவியிலும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை” என்றார்.
கூடுதல் தகவல்கள் – லால்மணி வர்மா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.