ஆர்.சந்திரன்
தனிநபர் ரயில் பயணம் மேற்கொள்ளும்போது, ஐஆர்சிடிசி வலைதளத்திலோ, செல்போன் ஆப்களிலோ கூட பயண டிக்கெட் பெற இப்போது வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இதே வகையில் ஒரு குழுவாக பயணிப்பவர்கள் முன்பதிவு செய்ய முடியாது. தற்போதைய நிலையில் அதிகபட்சமாக 6 பேர் வரைதான் ஐஆர்சிடிசி மூலம் பயண டிக்கெட் பெறலாம். அதற்கு மேல் போனால், இந்த வலைதளம் அனுமதிக்காது. எனினும் 6களின் எண்ணிக்கையில் சிறிது சிறதாக முயற்சி செய்யலாம்.
ஆனால், அவ்வாறு செய்யும்போது, அந்த குழுவினர் அனைவருக்கும் ஒரே ரயில்பெட்டியில்... அருகருகே பயண டிக்கெட் கிடைப்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. அதனால், அந்த குழுவின் ஒரு பகுதி ஒரு பெட்டியிலும், மற்றொரு தரப்பு வேறு பெட்டியிலும் இருக்கை / படுக்கை ஒதுக்கப்படலாம். அப்படி நந்தால், ஒன்றாக பயணிப்போம்; பயணத்தின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம் என்ற வாய்ப்பும் கிடைக்காது.
எனினும், தேர்ந்தெடுத்த ரயில் நிலையங்களில் உள்ள பயண டிக்கெட் முன்பதிவு மையத்துக்கு நேரில் சென்றால், இந்த முன்பதிவு செய்து சாத்தியம்தான். இதற்கு சில ஆவணங்களையும், விண்ணப்பமும் தரவேண்டி வரலாம்.
இது குறித்து ரயில்வே தரப்பில் கூறப்படும் தகவல்படி, 50 நபர்கள் வரையான முன்பதிவு என்றால், அந்த முன்பதிவு மையத்தில் உள்ள தலைமை முன்பதிவு கண்காணிப்பாளர் அனுமதி பெற்று, அனைவருக்கும் ஒரே பெட்டியில் இடம் ஒதுக்கப்பட்டு, பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். ஆனால், 50க்கு மேல், ஆனால் 100க்குள் பயண டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டி வந்தால், அதற்கு அந்த முன்பதிவு மையத்தில் உள்ள பகுதி மேலாளர் அல்லது அவரது தகுதிக்கு குறையாக பிற அதிகாரிகள் அனுமதிக்க முடியும். எனினும் 100 நபர்களுக்கும் மேல் ஒரே குழுவாக பயணிக்க நேர்ந்தால், குழுவினரின் மொத்த எண்ணிக்கையில் குறைந்தது 25 சதவீத ஆட்களுக்கு இடம்ஒதுக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே, அந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
இவ்வகையிலான மொத்த பயண முன்பதிவு டிக்கெட் கோருவார், அந்த ரயில்நிலைய கவுண்டர்களில் குழு முன்பதிவு வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்து கொண்டபின் தொடங்க வேண்டும்.
மறுபுறம், குழுவாக பயணிப்பதற்கான காரணம் தொடர்பான ஆவணங்களையும் முன்பதவு செய்யும்போது வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் குழுவாக சுற்றுலா செல்வதாக இருந்தால், அந்த பள்ளி அல்லது கல்லூரி முதல்வர் அல்லது நிர்வாகத்தின் சார்பில் ஒரு கோரிக்கையும், விளக்கக் கடிதமும் தர வேண்டியிருக்கும். மாறாக, இந்த குழு ஒரு திருமணம் போன்ற எதோ நிகழ்ச்சிக்காக பயணிப்பதாக இருந்தால், திருமண அழைப்பிதழ் அல்லது அந்த தகவலை உறுதி செய்யும் நோட்டரி வழக்கறிஞர் சான்றிதழ் பெற வேண்டி வரும்.
இதுதவிர, ரயில் பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நாளல் காலை 8 முதல் 9 வரை மொத்தமாக முன்பதிவு செய்ய இயலாது. அதோடு, குழுவாக முன்பதிவு கோரும் விண்ணப்பத்துடன், குழுவில் இடம்பெற்றுள்ள நபர்களின் எண்ணிக்கை, அவர்களது பெயர், வயது, பாலினம், தொடர்பு முகவரி போன்ற தகவல்கள் கொண்ட 3 பிரதிகளை சமர்பிக்க வேண்டும்.
பயண மேற்கொள்ள முன்பதிவு செய்வது போலவே, நினைத்த காரியம் முடித்து திரும்பும்போதும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இப்படி பல நிபந்தனைகள் கொண்டதாக குழு முன்பதிவு அமைந்துள்ளது.