இந்திராணி முகர்ஜி சிறையில் தாக்கப்பட்டது உண்மைதான்: மருத்துவ பரிசோதனையில் அம்பலம்

உயிரிழந்த கைதி மஞ்சுவின் கழுத்தை புடவையால் இறுக்கி அதிகாரிகள் இழுத்துவந்ததை கண்டதாகவும் முக்கிய சாட்சியங்களை கூறினார்.

இந்திராணி முகர்ஜியின் கைகள் உள்ளிட்ட உடல் பாகங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்ததால், அவர் சிறையில் தாக்கப்பட்டது உறுதியானது.

தனியார் தொலைக்காட்சி தலைமை பொறுப்பிலிருந்த இந்திராணி முகர்ஜி, மகளை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கைதாகி மும்பை பைகுலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி கைதி மஞ்சு ஷெட்டி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸாரால் பிறப்புறுப்புக்குள் லத்தி சொருகப்பட்டு அவர் கொடுமையாக கொலை செய்யப்பட்டதாக சக கைதிகள் குற்றம்சாட்டினர்.

இச்சம்பவத்தைக் கண்டித்து, சக கைதிகள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட சுமார் 200 கைதிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும், மஞ்சு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறை காவலர் உட்பட 6 அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனிடையே, சிறை மரணத்தை தட்டிக்கேட்டதால் சிறைத்துறை அதிகாரிகளால் இந்திராணி முகர்ஜி தாக்கப்பட்டதாகவும், அதனால், கை,கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்களில் காயம் ஏற்பட்டதாகவும் அவரது சார்பில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இந்திராணி முகர்ஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதில், சிறையில் கடுமையாக தாக்கப்பட்டதால் நடக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டினார். மேலும், உயிரிழந்த கைதி மஞ்சுவின் கழுத்தை புடவையால் இறுக்கி அதிகாரிகள் இழுத்துவந்ததை கண்டதாகவும் முக்கிய சாட்சியங்களை கூறினார்.

இதையடுத்து, அவரை முழு உடல் பரிசோதனை செய்யவும், சிறையில் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அவரது கை உள்ளிட்ட உடல் பாகங்களில் மழுங்கிய காயங்கள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால், அவர் சிறையில் தாக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

×Close
×Close