பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்து வந்த பீட்டர் முகர்ஜியாவின் மனைவி இந்திராணி முகர்ஜியா. இவர், தான் பெற்ற மகளான ஷீனா போராவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மும்பையின் பைகுலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மும்பையின் பைகுலா பெண்கள் சிறையில், கைதிகளிடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இந்திராணி முகர்ஜியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, மஞ்சு ஷெட்டி (31), எனும் பெண் கைதியை சிறைக் காவலர்கள் தாக்கியதில் அவர் பலியானதாக கூறப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தையடுத்து, சிறை அதிகாரி ஒருவர் மீது சிறைக் கைதிகள் மறுநாள் காலையில் தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து, பைகுலா சிறையில் கலவரம் மூண்டது. இக் கலவரம் தொடர்பாக சிறைக் கைதிகள் சுமார் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், இந்திராணி முகர்ஜியாவும் அடங்குவார். அவர் மீது, பணியில் இருந்த அரசு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது என்பன உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், பெண் கைதி பலியான சம்பவம் தொடர்பாக, சிறைக் காப்பாளர் உள்பட அதிகாரிகள் ஆறு பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.