பைகுலா சிறையில் பெண் கைதி அதிகாரிகளால் நிர்வாணமாக்கப்பட்டு கொலை?

மஞ்சு ஷெட்டியை சிறைத்துறை அதிகாரி ஒருவரும், 5 பெண் போலீஸாரும் கொடூரமாக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மும்பை சிறையில் பெண் கைதி ஒருவர், சிறைத்துறை அதிகாரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு, பிறப்புருப்பில் லத்தியை சொருகி கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது.இது ஒட்டுமொத்த இந்திய சிறைத்துறை மீதான அச்சத்தையும், கைதிகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களையும் அதிகப்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தலைமை பொறுப்பை வகித்துவந்த இந்திராணி முகர்ஜியா, தன் மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கைதாகி, கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து மும்பை பைகுலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, உறவினரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை
பெற்ற மஞ்சு ஷெட்டியை சிறைத்துறை அதிகாரி ஒருவரும், 5 பெண் போலீஸாரும் கொடூரமாக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்,கைதி மஞ்சுவின் பிறப்புருப்பில் லத்தியை சொருகி கொடூரமாக துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து மற்ற கைதிகள் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கைதிகள் சிலர் சிறைத்துறை அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், பெண் கைதி மர்ம மரணமடைந்த சம்பவம் தொடர்பாக சிறை காவலர் உட்பட அதிகாரிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மஞ்சு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சக கைதிகளிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சிறைத்துறை அதிகாரிகள் கடந்த 2 மாதங்களாகவே மஞ்சுவை துன்புறுத்தி வந்ததாக தெரிவித்தனர். சிறையில் குறிப்பிட்ட கைதிகளை கண்காணிக்கும் பொறுப்பிலிருந்த மஞ்சுவை சக கைதிகளுக்கு பிடித்துபோனது. அதனால் ஏற்பட்ட பொறமையாலேயே அதிகாரிகள் திட்டமிட்டு அவரை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாரிகள் மஞ்சுவை நிர்வாணமாக்கி துன்புறுத்தி கொலை செய்ததாக நேரில் பார்த்த சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய் கிழமை, இந்திராணி முகர்ஜியை சந்தித்த அவரது வழக்கறிஞர் குஞ்ஜன் மங்ளா, சக பெண் கைதியின் சந்தேக மரணத்தை தட்டிக்கேட்டதால், அவரை சிறைத்துறை அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் அளித்ததாகவும் இந்திராணி தெரிவித்ததாக கூறினார்.

இந்திராணி முகர்ஜி சார்பில் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்திராணி முகர்ஜியை அதிகாரிகள் தாக்கியதில் கை,கால் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டிருந்ததை தான் கண்டதாக வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்திராணி முகர்ஜி நேரில் ஆஜரானார். அப்போது அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவும் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

சிறையில் நிகழும் சந்தேக மரணங்களால் காவல் துறை மற்றும் சிறைத்துறை மீதான நம்பிக்கையை பொதுமக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை சிறையில் பெண் கைதி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்திருப்பது குறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close