குடியுரிமைசட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் அசாமில் தீவிரமடைந்துள்ள நிலையில், புதன்கிழமை இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த பதட்டாமான சூழ்நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள்,மக்கள் கவலைப்படுகிறார்கள், குழப்பமடைந்துள்ளனர் என்று தங்களது உண்மையான அக்கறையை வெளிப்படுத்தினர்.
அசாமில் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' என்ற ஆங்கில நாளிதழிடம் பேசுகையில், மசோதா குறித்து நிறைய தவறான புரிதல் மக்களிடத்தில் உள்ளது. இருந்தாலும், எதிர்ப்பு தெரிவிக்கும் வழிமுறை தவறாக உள்ளது என்றும் கருத்தை வெளிப்படுத்தினர்.
தேஸ்பூரைச் சேர்ந்த எம்.பி. பல்லப் லோகன் தாஸ் இது குறித்து கூறுகையில், மசோதா பற்றிய தகவலை மக்களுக்கு கொண்டு செல்லும் விதத்தில் தான் பிரச்சனை உருவாகிறது. உதாரணமாக, 'வரும் காலங்களில் அசாமை நோக்கி லட்சம் பேர் வருவார்கள், வங்கதேசத்தை சேர்ந்த மக்களுக்கான எல்லை வேலிகள் இந்த மசோதாவால் உடைக்கப்பட்டுள்ளது' போன்ற தவறான செய்தி மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. மசோதாவில் சொல்லப்பட்டிருக்கும் கட்-ஆஃப் தேதி குறித்து மக்களிடம் எதுவும் கூறப்படவில்லை என்றார்.
இந்துக்கள், சீக்கியர்கள், புத்திஸ்டுகள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகளுக்கு இந்திய குடியுரிமையை வழங்க இந்த மசோதா முயல்கிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து மேற்படி கூறிய ஆறு சமூக மக்கள் மட்டும் 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்தியாவிற்குள் நுழைந்திருக்க வேண்டும். இந்த மசோதா இந்த மூன்று நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களை விட்டு விடுகிறது.
தாஸின் கூற்றுப்படி, அசாமிய மொழி வங்காள மொழியால் பின்னுக்குத் தள்ளப்படுவதாகவும், சொந்த மண்ணில் சிறுபான்மையினராக மாறும் நிலை வரும் என்றும் இந்த மக்கள் அஞ்சுகிறார்கள்.
இந்த பயத்தை போக்க நாங்கள் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மொழியைப் பாதுகாக்க மத்திய அரசு ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். அஸ்ஸாமில் ஆறு சமூகங்கள் பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்தை நாடுகின்றன, அதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க முன்வர வேண்டும் என்றும் கூறினார்.
குவாஹாட்டி எம்.பி., ராணி ஓஜா, 'நிலைமை மோசமாகின' என்பதை ஒப்புக்கொண்டார். “இது நல்லதல்ல… நாளை என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. மக்களிடம் தவறான புரிதலும், தவறான விளக்கமும் கொடுக்கப்பட்டு உள்ளது. மக்கள் விஷயங்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இது மோசமடைகிறது, ”என்றார்.
பங்களாதேஷைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் தங்கள் அடையாளம் இழக்கப்படும் என்று மக்கள் அச்சத்தையும், கவலையும் நான் புரிந்துகொள்கிறேன். இது உண்மையான அக்கறை . எதிர்ப்பு தெரிவிக்கும் அவர்களின் உரிமையை நான் ஆதரிக்கிறேன். ஆனால், தெரிவிப்பதற்கான முறை தவறாக உள்ளது என்று தெரிவித்தார்.
எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள் ? என்று கேள்விக்கு,“இப்போது நிலைமை மிகவும் பதட்டமாக உள்ளது. உலோகம் மிகவும் சூடாக இருக்கும்போது அதைத் தொட்டால் நமது கைகள் எரிக்கப்படும். ஆகையால், காத்திருக்கலாம். நாங்கள் மெதுவாகத் தான் முயற்சி செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.
மங்கல்டோயைச் சேர்ந்த எம்.பி. திலீப் சாய்கியா, “நிலைமை மிகவும் பதட்டமானது” என்று கூறினார். பங்களாதேஷில் இருந்து இந்துக்கள் வருவதை நினைத்து அசாம் மக்கள் அஞ்சுகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டார் சாய்கியா . இது குறித்து கூறுகையில்," அசாம் பழங்குடியின மக்கள் தங்கள் உரிமையும், வாழ்வாதாயமும் பறிபோகும் என்றும், லட்சக்கணக்கானோர் வருகையால் தங்கள் மொழியைப் பற்றிய கவலையும் அவர்களுக்கு உண்டு" என்று தெரிவித்தார்.
அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்தாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய சாய்கியா, 1985ம் ஆண்டு அசாம் உடன்படிக்கையில் முந்தைய ஆட்சியாளர்கள் செய்யத் தவறினர், ஆட்சியிலுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் முக்கிய உட்பிரிவுகளை செயல்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளது "என்றும் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகளைக் காண நரேந்திர மோடி அரசு ஒரு உயர் மட்டக் குழுவை நியமித்துள்ளது. நாங்கள் கவலைப்படுகிறோம். அசாமி எங்கள் மொழியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ”என்பதாய் தனது கருத்தை முடித்தார்.
இந்த முறை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் சம்பந்தப்பட்ட ஒரு பரந்த ஆலோசனை செயல்முறை இருப்பதாக தாஸ் மற்றும் சைக்கியா சுட்டிக்காட்டினர். “இதுபோன்ற முயற்சிகளை யாரும் இதுவரை எடுக்கவில்லை. நாங்கள் முயற்சித்தோம். ஆனால் யாராவது வேண்டுமென்றே புரிந்து கொள்ள விரும்பவில்லை, சிக்கலை உருவாக்கினால், நாம் என்ன செய்ய முடியும்? ”என்று தாஸ் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.