இந்திய- சீன எல்லையில் பதற்றம் தணியவில்லை. மறுபுறம் சீனா படைகளை வாபஸ் பெறவில்லை. இந்த நிலையில், மேலும் 9 ஆயிரம் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை போலீஸ்-ஐ நிறுத்த மத்திய அமைச்சரவை புதன்கிழமை (பிப்.15) ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இந்திய மற்றும் சீனப் படைகள் பலமுறை மோதிக்கொண்டன.
இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “2013-14 முதல் ITBP இன் நீண்டகால முன்மொழிவாக இது உள்ளது. தொடக்கத்தில் புதிதாக 12 பட்டாலியன்களை உருவாக்க திட்டமிடப்பட்டது, ஆனால் தற்போது ஏழு பட்டாலியன்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
மேலும், எல்லைப் புறக்காவல் நிலையங்கள் மற்றும் எல்.ஏ.சி.யில் முகாம்களை நடத்துதல் ஆகியவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முடிவோடு இது இணைந்துள்ளது” என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்கின் யாங்சே பகுதியில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அங்கு பல இந்திய துருப்புக்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு முன்னும் பின்னும், இராணுவத் தளபதி மனோஜ் பாண்டே பல சந்தர்ப்பங்களில் சீன-இந்திய எல்லையில் நிலைமை “நிலையானது ஆனால் கணிக்க முடியாதது” என்று அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
ஏப்ரல் 2020 முதல் லடாக்கில் இந்திய மற்றும் சீனப் படைகள் ஒரு மோதல் சூழ்நிலையில் இருந்தன. இது ஜூன் 2020 இல் கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இரு படைகளுக்கும் இடையே மோதல்களுக்கு வழிவகுத்தது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/