ஆடிட்டர்களை ஆடிட் செய்ய புதிய ஆணையம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தனது பங்குகளை வணிகத்துக்கு அனுமதித்துள்ள எல்லா நிறுவனங்களின் ஆடிட்டர்களையும் கண்காணிக்கும்

ஆர் சந்திரன்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 12,700 கோடி ரூபாய் மோசடிக்கு, ஆடிட்டர்கள் சரியாக செயல்படாததுதான் முக்கிய காரணம் என நினைக்கும் மத்திய அரசு, இதற்காக ஒரு புதிய ஆணையத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. புதிய கம்பெனிகள் சட்டத்தின்படி வடிவம் பெற உள்ள இந்த தனி ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் தந்துள்ளது.

NFRA (National Financial Reporting Authority) எனக் குறிப்பிடப்பட உள்ள – ஆடிட்டர்களுக்கான இந்த புதிய கட்டுப்பாட்டு ஆணையம் – இந்திய பங்குசந்தையில் பதிவு பெற்று, அங்கே தனது பங்குகளை வணிகத்துக்கு அனுமதித்துள்ள எல்லா நிறுவனங்களின் ஆடிட்டர்களையும் கண்காணிக்கும்; கட்டுப்படுத்தும். இதுதவிர, பங்குசந்தையில் பட்டியலிடப்படாத பெரிய பொதுத்துறை நிறுவனங்களை ஆடிட் செய்பவர்களும் இதன் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பட்டியலிடப்படாத பெரிய நிறுவனம் என்பதற்கான வரம்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

புதிதாக உருவாக்கப்பட உள்ள இந்த ஆணையத்துக்கு ஒரு தலைவர், ஒரு செயலர் தவிர, இரு முழு நேர உறுப்பினர்கள் இருந்து, நிர்வாகப் பணிகளை கவனித்துக் கொள்வர். இதுதவிர, இந்த ஆணையத்தில் அதிகபட்சமாக 15 முழு நேர அல்லது பகுதி நேர உறுப்பினர்களை தேவை அடிப்படையில் அமர்த்திக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூடவே, இந்த ஆணையத்தின் நடவடிக்கை மீது புகார் இருந்தால் முறையிட, ஒரு மேல்முறையீட்டு அமைப்பும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், இவ்வளவு நாட்களாக ஆடிட்டர்களையும், அவர்களது பணிகளையும் முறைப்படுத்தி வந்த ஆணையமான ஐசிஏஐ, தொடர்ந்து செயல்படும் என்றும், அது தனியார் துறையில் உள்ள ஏராளமான சிறு நிறுவனங்களின் ஆடிட்டர்களைக் கட்டுப்படுத்தும் பணியை மேற்கொள்வதோடு, ஏற்கனவே செய்து வரும் பணியான – பயிற்சி அளித்தல், அரசுக்கு ஆலோசனை வழங்கல், பாட திட்டங்களை முடிவு செய்தல் போன்ற பணிகளையும் தொடரும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வங்கிகளில் பொதுவாக 4 மட்டங்களில் ஆடிட்டிங் பணி நடைபெறுகிறது. அவ்வப்போது செய்யப்படும் ஆடிட், உள்மட்டத்திலான ஆடிட், ஆண்டு இறுதி ஆடிட் என்பவை தவிர, ரிசர்வ் வங்கி ஆடிட் என கட்டாயமாக நடைபெற வேண்டிய இவற்றில், 2011 முதல் 2018 வரை என, 7 ஆண்டுகளில் யாரும் இவ்வளவு பெரிய மோசடி தொடர்வதை கண்டுபிடிக்கவில்லை என்பது அரசின் கோபத்துக்குக் காரணம். அதோடு, ஆடிட்டர்களை கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் அமைப்பாக, அத்துறையினரே இருந்ததுதான் பிரச்னைக்கு மிக முக்கிய காரணம் என கருதும் மத்திய அரசு, அதை களையும் விதமாகவும் இப்போது புதிய வழிகாட்டு ஆணையத்தை தொடங்குவதாகச் சொல்லப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close