Advertisment

முதன் முதலாக விண்வெளியில் மனிதர்கள்! இஸ்ரோவின் 'ககன்யான்' திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

விரைவாக பருவ வயதை அடைவதற்காக ஹார்மோன்கள், செயற்கை மருந்துகள் செலுத்துவது ஆகிய குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க திருத்தம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India’s first human space flight likely to have woman on board

India’s first human space flight likely to have woman on board

விண்வெளிக்கு 3 வீரர்களை அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisment

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் அடுத்த லட்சிய திட்டம் ‘ககன்யான்’ திட்டம். ரஷ்யா, பிரான்சுடன் இத்திட்டத்திற்கான உதவிகளைப் பெற இந்தியா ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருக்கிறது. மூன்று வீரர்களுடன் செல்லும் ககன்யான் விண்கலம், எஸ்எல்வி மார்க் -3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2022ம் ஆண்டு ஏவப்பட உள்ளது.

அதற்கு முன்பாக 2 ஆளில்லா விண்கலங்கள் தயாரிக்கப்பட்டு, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் ஏவப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும். ககன்யான் விண்கலம் 3 வீரர்களையும் 300 கி.மீ. முதல் 400 கி.மீ. தூரம் உள்ள புவியின் கீழ் சுற்றுவட்டப் பாதைக்கு கொண்டுச் செல்லும். அங்கு 3 வீரர்களும், மைக்ரோ புவியீர்ப்பு சோதனைகளை ஒருவாரம் மேற்கொண்டு பிறகு விண்கலம் மூலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழைவார்கள்.

ஏழு டன் எடையுள்ள அந்த விண்கலம் பாராசூட் மற்றும் ஏரோ பிரேக் கருவிகள் மூலம் குஜராத் அருகே அரபிக்கடலில் விழுந்து மிதக்கும். பின் அதிலிருந்து 3 வீரர்களும் கடற்படை உதவியுடன் மீட்கப்படுவார்கள். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், வங்கக்கடலில் விண்கலத்தை தரையிறக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. வீரர்கள் பூமி திரும்பும் பயணம் 36 நிமிடங்களுக்குள் முடிந்து விடும். ககன்யான் விண்கலத்தில் செல்லும் வீரர்கள் இனிமேல் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக இஸ்ரோ இதுவரை ரூ.173 கோடி செலவு செய்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ககன்யான் திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. ககன்யான் திட்டம் மூலம் மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய நாடுகளின் வரிசையில் (அமெரிக்கா, ரஷ்யா, சீனா) இந்தியாவும் இடம்பெறும்.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட மேலும் சில முக்கிய முடிவுகள்:

2019-ம் ஆண்டுக்கான அரவை கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.9,521 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இது ரூ.7,511 ஆக உள்ளது. அதேபோல முழு கொப்பரை தேங்காய் குவிண்டால் ரூ.9,920 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது தற்போது ரூ.7,750 ஆக உள்ளது. இது விவசாயிகளுக்கு சரியான விலை வழங்கப்படுவதை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தென்னை பயிரிடுதலில் முதலீட்டை அதிகரிக்கவும், உற்பத்தியையும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரையின்படி இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை (போக்சோ 2012) திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படும். இந்த சட்டத்தின் பிரிவுகள் 4, 5, 6 ஆகியவை மரண தண்டனை உள்பட கடும் தண்டனைகள் வழங்குவதற்கு வகை செய்கிறது. சட்டங்கள் கடுமையாக்கப்படுவதுடன், விரிவு படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாலியல் ஆபாச காட்சிகளை வெளியிடுதல், விரைவாக பருவ வயதை அடைவதற்காக ஹார்மோன்கள், செயற்கை மருந்துகள் செலுத்துவது ஆகிய குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்திய முறை மருத்துவ தேசிய ஆணையத்தை அமைப்பதற்கான வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதா வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் தற்போதுள்ள இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலுக்கு பதிலாக புதிய அமைப்பை உருவாக்க வகை செய்கிறது. இந்த முறையிலான மருத்துவத் துறையில் பட்டம் பெறும் அனைவரும் பணியாற்றுவதற்கான உரிமங்களை பெற பொது நுழைவு மற்றும் வெளியேறும் தேர்வுகள் நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஹோமியோபதி ஆணையம் 2018-க்கான வரைவு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள மத்திய ஹோமியோபதி கவுன்சிலுக்கு மாற்றாக கொண்டுவரப்படும் தேசிய ஹோமியோபதி ஆணையம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2018-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் கடலோர பகுதிகள் பாதுகாக்கப்படுவதோடு பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். கடலோர பகுதிகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதோடு, வாழ்க்கை தரம் உயர வழிவகுக்கும். கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான கழிப்பிடங்கள், ஆடை மாற்றும் அறைகள், குடிநீர்வசதி போன்றவை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. மாசு சுத்திகரிப்பு வசதிகள் ஏற்படுத்த அனுமதி அளிக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டு அமைப்புக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சமர்ப்பிக்கப்படும் அறிக்கைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

India Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment