ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்தார்.
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

மக்களவையில் நேற்று ரபேல் விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்பிக்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்களை கண்டித்து பாஜக எம்பிக்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. மத்திய அரசுக்கு தைரியம் இருந்தால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. அதன்பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, மாநிலங்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கையை தாக்கல் செய்தார். 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. விமானப்படையின் மற்ற கொள்முதல் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
இதைத் தொடர்ந்து, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பொய், தாக்குதல், மற்றும் மிரட்டல் ஆகிய இம்மூன்றும் தான் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சித் தத்துவமாக உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவையில் பேசியுள்ளார்.
சிஏஜி அறிக்கை விபரம் :
"பா.ஜ.க ஆட்சியில் முந்தைய காங்கிரசில் போடப்பட்ட 9 சதவீதத்திற்கு பதிலாக, 2.86 சதவீதம் விலையிலேயே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 126 போர் விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்கள் உடனடியாக வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் இந்தியாவிற்கு 17.08 சதவீதம் தொகை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
இறுதி நிலை விலை (பிளைஅவே) ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்ததே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. 126 போர் விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்ததை விட முதல்கட்டமாக 18 ரபேல் போர் விமானங்கள் 5 மாதங்களில் சப்ளை செய்யப்படும்.
இருப்பினும் அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ரபேல் போர் விமான விலை குறித்து எந்த விபரமும் குறிப்பிடப்படவில்லை".
ரபேல் ஒப்பந்தம் பிரச்சனை ஆனதே, ஒரு விமானத்தின் தனிப்பட்ட விலை காரணமாகத்தான். ஆனால் இந்த சிஏஜி அறிக்கையில் ஒரு ரபேல் விமானத்தின் விலை என்ன என்று கூறப்படவில்லை
