இளம் பருவபெண்கள் பாலியல் ஆசைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும் அத்தகைய தீர்ப்புகளை கூறுவது முற்றிலும் தவறானது என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று (ஜன.4) கூறியது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், வழக்கை பாருங்கள்ள. நீதிபதிகள் என்ன வகையான கொள்கைகளைப் பயன்படுத்தியுள்ளனர். போக்சோ பிரிவை திருத்த வேண்டும் என்றும், அது திருத்தப்படாததால், அவர்கள் பிரிவு 482-ன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்துவார்கள் என்று கூறியுள்ளனர்.
இதுபோன்ற கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன என்பது எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் இதை கவனிக்க வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது. மேலும் பிரிவு 482 என்பது உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதாகும்.
கடந்த அக்டோபர் 18-ம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வந்த வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஒவ்வொரு இளம் பருவபெண்களும் தங்களது பாலியல் ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வெறும் 2 நிமிட பாலியல் ஆசைகளுக்காக பெண்கள் இந்த சமூகத்தின் முன் தோற்றவர்களாக மாறி விடக் கூடாது என்று கருத்து கூறியிருந்தனர். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. தொடர்ந்து உச்ச நீதிமன்றம் டிசம்பர் 8, 2023 அன்று மேற்கு வங்க மாநிலத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேற்கு வங்க அரசு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக என்பதையும் அறிய வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ் ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அமர்வில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹுசெபா அஹ்மதி கூறுகையில், அக்டோபர் 18, 2023 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கில் பல சிக்கலான பகுதிகள் உள்ளன என்று அஹ்மதி வாதிட்டார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/absolutely-wrong-sc-on-calcutta-hc-advice-to-girls-to-control-sexual-urge-9095782/
தொடர்ந்து நீதிபதி ஓகா கூறுகையில், “ஒவ்வொரு பத்தியும் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. எல்லாவற்றையும் நாங்கள் கவனித்துள்ளோம் ” என்றார். இதையடுத்து மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனு மற்றும் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்த வழக்கு இரண்டையும் ஒன்றாக ஜனவரி 12-ம் தேதிக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“