உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை எதிர்கொண்டிருக்கும் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி, எப்போதுமே தன் மனதில் பட்டதைப் பேசியிருக்கிறார்; மேற்குவங்க மாநிலத்தில்ஆசிரியர் பணி நியமன ஊழலில் அவரது அழுத்தம் பேசுபொருளாகியுள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா திங்கள்கிழமை உச்ச நீதிமன்ற கண்டனத்தை எதிர்கொள்வது புதிதல்ல. குறிப்பாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்துடன் அவர் அடிக்கடி மோதல் போக்கில் ஈடுபடுவது குறித்து செய்தி வெளியாவதும் புதிதல்ல.
நீதிபதி கங்கோபாத்யாயா, ஏ.பி.பி ஆனந்தாவுக்கு அளித்த நேர்காணலைக் கவனத்தில் கொண்டு, மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு விசாரணையைப் பற்றி விவாதித்தது குறித்து, “நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பேட்டி கொடுப்பது நீதிபதியின் வேலையில்லை” என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கூறியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்தாசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய உச்ச அமர்வு, பணி நியமன ஊழல் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி கங்கோபாத்யாயா பேட்டி அளித்தது குறித்து நான்கு நாட்களுக்குள் உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் அறிக்கை கேட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, வியாழக்கிழமைக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் கேட்டுக்கொண்டது. மேலும், நீதிபதியின் சில அவதானிப்புகள் குறித்த (திரிணாமூல் காங்கிரஸ்) டி.எம்.சி தலைவர் அபிஷேக் பானர்ஜியின் மனுவை மறுநாள் விசாரிக்கும் என்று கூறியது.
நீதிபதி கங்கோபாத்யாயாவின் விசாரணைகளை டி.எம்.சி அடிக்கடி எதிர்கொள்ளும் நிலையில், அதன் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் ட்வீட் செய்துள்ளார். அதில், உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கை அவர்களின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு ஊழல் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகவும் மகிழ்ச்சியாக இருக்காது என்று பா.ஜ.க கூறியுள்ளது. “அவர்களின் ஊழல் அம்பலமானது, அவர்கள் வெட்கப்பட வேண்டும். நீதித்துறை விவகாரத்தில் இவ்வளவு மகிழ்ச்சியை வெளிப்படுத்த எந்த காரணமும் இல்லை” என்று பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா கூறினார்.
நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா யார்?
மே 2, 2018 அன்று கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி கங்கோபாத்யாயா ஜூலை 30, 2020-ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மாநிலத்தில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறைகேடுகள் மற்றும் ஆட்சேர்ப்புச் செயல்பாட்டில் உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதில் முதல் உயர்மட்ட அளவில் கைது நடவடிக்கைகளில் டி.எம்.சி தலைவரும் அப்போதைய அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜியும் ஒருவர். 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், பண மூட்டைகள் என சாட்டர்ஜியுடன் இணைக்கப்பட்டபோது, ஊடக வெளிச்சத்தின் பரபரப்பை டி.எம்.சி எதிர்கொண்டது.
இதைத் தொடர்ந்து, மேற்கு வங்கக் கல்வித் துறையின் மூத்த அதிகாரிகளான துணைவேந்தர் சுபிரேஷ் பட்டாச்சார்யா, டி.எம்.சி எம்.எல்.ஏ மற்றும் மேற்கு வங்க தொடக்கக் கல்வி வாரியத் தலைவர் மாணிக் பட்டாச்சார்யா, டி.எம்.சி எம்.எல்.ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பணம் வாங்கிக்கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் வேலை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
தேர்வில் தோல்வியடைந்து நீதிமன்றத்திற்கு சென்றவர்கள் நியமிக்கப்பட வேண்டும், தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதியின் நேர்காணல்
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டி.எம்.சி மீது அழுத்தம் அதிகரித்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி நீதிபதி கங்கோபாத்யாயா ஏ.பி.பி ஊடகத்தின் ஆனந்தாவுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் மாநில அரசாங்கத்தையும் கட்சியையும் விமர்சித்தார்.
டி.எம்.சி உடனடியாக விதிவிலக்காக எடுத்துக்கொண்ட கருத்துக்களில், நீதித்துறையின் ஒரு பகுதி பா.ஜ.க உடன் கைகோர்த்து இருப்பதாகக் குற்றம் சாட்டியதற்காக, கட்சியின் பொதுச் செயலாளரும் அபிஷேக் பானர்ஜியை மூன்று மாதங்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதிபதி கங்கோபாத்யாயா கூறினார்.
“நேர்காணலுக்குப் பிறகு, சர்ச்சை ஏற்படும் என்பதை நான் அறிவேன். ஆனால், நான் என்ன செய்தாலும் அது பெங்களூரு நீதித்துறை நடத்தை கோட்பாடுகளின்படி உள்ளது. நீதிபதிகளுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் அவர்கள் என்ன சொன்னாலும் அதன் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டது.” என்று நீதிபதி கூறினார்.
நீதிபதி கங்கோபாத்யாவின் கருத்துப்படி, நீதித்துறையை நோக்கி விரல் நீட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நம்பினார்.
முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி குறித்து, நீதிபதி, டி.எம்.சி எம்.பி. நீதித்துறை தொடர்பாக கருத்து தெரிவித்தபோது அவர் லடாக்கில் இருந்ததாக கூறினார். “நான் அவருக்கு எதிராக ஒரு தீர்ப்பை வெளியிடுவேன், அவரை அழைப்பேன், நடவடிக்கை எடுப்பேன் என்று நினைத்தேன். கொல்கத்தாவில் மீண்டும் ஒருமுறை, இது தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டேன். ஆனால், ஒரு டிவிஷன் பெஞ்ச் அதை பரிசீலிக்கவில்லை. அவர் கூடுதல் கவனம் பெறுவார் என்று நினைத்தார்கள். ஆனால் எனக்கு வேறு கருத்து உள்ளது.” என்று கூறினார்.
“ஊழலுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை” என்று கூறிய நீதிபதி கங்கோபாத்யாயா, “நான் தீர்ப்புகளை வழங்க விரும்புகிறேன். நான் இல்லாவிட்டாலும், நீண்ட காலத்திற்குப் பிறகு, இது போன்ற ஒரு நீதிபதி இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் அறிவார்கள்.” என்று கூறினார்.
நீதிமன்ற விசாரணை அறை
கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, ஆள்சேர்ப்பு வழக்கு விசாரணையின் போது, நீதிபதி கங்கோபாத்யாயா, திரிணாமுல் காங்கிரஸை அரசியல் கட்சியாக அங்கீகரித்ததை ரத்து செய்து, அதன் சின்னத்தை திரும்பப் பெறுமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், “அரசியலமைப்புச் சட்டத்தை குழப்புவதற்கு யாருக்கும் உரிமை இல்லை” என்று அவர் கூறினார்.
“சட்டவிரோத பணி நியமனங்களுக்கு இடமளிக்கும் வகையில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்குவதற்காக மாநில அமைச்சரவை முடிவு எடுப்பதற்கு கல்வி அமைச்சர் பிரத்யா பாசு உத்தரவிட்டார் என்று மேற்கு வங்கக் கல்விச் செயலர் மணீஷ் ஜெயின் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து இந்த விசாரணை வந்தது. மேலும், அந்த கூட்டத்தில் தானும் கலந்து கொள்ளவில்லை என்று ஜெயின் தெரிவித்தார்.
அமைச்சரவை அத்தகைய முடிவை எப்படி எடுக்க முடியும் என்று ஆச்சரியம் தெரிவித்த நீதிபதி கங்கோபாத்யாயா, “சட்டவிரோத நியமனங்களை ஆதரிக்கவில்லை என்று மாநில அமைச்சரவை அறிவிக்க வேண்டும். மேலும், கூடுதல் ஆசிரியர் நியமனங்களை உருவாக்குவதற்கான மே 19 (2022) அறிவிப்பையும் திரும்பப் பெற வேண்டும். இல்லையேல், நாட்டில் இதுவரை இல்லாத ஒரு முடிவை எடுப்பேன்… தேவைப்பட்டால், மாநில அமைச்சரவை முழுவதையும் இந்த விவகாரத்தில் ஒரு கட்சியாக்கி ஒவ்வொரு உறுப்பினரையும் வரவழைப்பேன். தேவைப்பட்டால், அவர்கள் அனைவருக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்புவேன்” என்றார்.
நீதிமன்றத்திற்கு வந்திருந்த டி.எம்.சி எம்.பி-யும் வழக்கறிஞருமான கல்யாண் பந்தோபாத்யாயா ஒரு கூர்மையான பதிலில், நீதிபதிக்கு கட்சி பற்றி கருத்து தெரிவிக்க “தார்மீக அதிகாரம் இல்லை” என்று கூறினார். ஏனெனில் அது விசாரணையில் இல்லை. “ஒரு நீதிபதியின் வாய்மொழிக் கருத்துகள் எந்த நிலையிலும் இல்லை… இன்று அவர் தைரியத்தைக் காட்டியிருக்க வேண்டும். அவரது விசாரணைக்கு எழுத்துப்பூர்வ உத்தரவை வழங்கியிருக்க வேண்டும். அப்புறம் அதற்கேற்ப முன்னோக்கி எடுத்துச் சென்றிருப்போம். ஒரு நீதிபதிக்கு நீதிமன்றத்தை நடத்துவதற்கு பரந்த அதிகாரம் உள்ளது. ஆனால், அந்த அதிகாரம் கட்டுப்பாடற்றது அல்ல… எந்த நீதிபதிக்கும் இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்க தார்மீக அதிகாரம் இல்லை. நீதிபதி ஒழுக்கமாகவும், சட்டத்திற்கு கட்டுப்பட்டவராகவும் இருக்க வேண்டும்.” என்று கூறினார்.
பந்தோபாத்யாயா மேலும் கூறுகையில், “இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அரசியல் கட்சியாக அங்கீகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை அடிப்படையாகக் கொண்ட விசாரணையாக இருந்திருந்தால், இது அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.” என்று கூறினார்.
டி.எம்.சி மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ், நீதிபதி கங்கோபாத்யாயா அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக “தனது நீதிபதி நாற்காலியை தவறாக பயன்படுத்துகிறார்” என்று குற்றம் சாட்டினார். அவரை ‘ஆரண்யதேப் கங்கோபாத்யாயா’ என்று அழைத்தார்.
அல்லது ‘பாண்டம் கங்கோபாத்யாயா’, குணால் கோஷ் கூறினார்: “நீதித்துறையை நாங்கள் மதிக்கிறோம். ஏனென்றால், நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த நீதிபதிகள் இருக்கிறார்கள். அவர்கள் அமைதியாக வேலை செய்கிறார்கள், பிம்பம் கட்டுவதில் ஈடுபடுவதில்லை. ஏதாவது தவறு இருந்தால், நிச்சயமாக அதை தவறு என்று கூற வேண்டும். மாநில அரசு தவறு செய்தால் கண்டிக்க வேண்டும். ஆனால், ஒரு அரசியல் கட்சி அங்கீகரிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து நீதிபதி கருத்து தெரிவிப்பாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
குணால் கோஷ் மேலும் கூறியதாவது: ஒருவரின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்ற நீதிபதி நாற்காலியை பயன்படுத்த முடியாது. அவர் என்ன செய்ய முயற்சிக்கிறார்? அவர் மேற்கு வங்கத்தின் இமேஜைக் கெடுக்கப் பார்க்கிறாரா? அவர் ஹீரோவாக முயற்சிக்கிறாரா?… ஓய்வுக்குப் பிறகு தனது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக அவர் தனது இமேஜை உருவாக்க முயற்சிக்கிறார்.” என்று கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜசேகர் மந்தா தனது நீதிமன்றத்தின் செயல்பாட்டை சீர்குலைத்ததற்காக வழக்கறிஞர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர், நீதிபதி கங்கோபாத்யாயா கூறினார்: “நான் எந்த நீதிமன்ற அறையின் பெயரையும் குறிப்பிட மாட்டேன். ஆனால், மேற்கு வங்கத்தில் நீதித்துறையை பயமுறுத்த முயற்சி நடக்கிறது என்பது உண்மைதான். இதுபோன்ற முயற்சிகளால் நொறுங்கும் அளவுக்கு நமது நீதித்துறை பலவீனமாக இல்லை” என்று அவர் ஒரு நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.