பெங்களூரு மெட்ரோவின் கட்டுமானப் பகுதியில் உள்ள தூண் விழுந்து தனது குறுநடை போடும் மகனுடன் உயிரிழந்த பெண்ணின் தந்தை, விபத்திற்கு காரணமானவர்களை தண்டிக்குமாறு கர்நாடக அரசிடம் புதன்கிழமை கேட்டுக் கொண்டார்.
செவ்வாயன்று, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) கட்டுமானப் பணியில் இருந்த ஒரு தூண் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் மென்பொருள் பொறியாளர் தேஜஸ்வினி, 28, மற்றும் அவரது மகன் விஹான், 2.5, ஆகியோர் உயிரிழந்தனர். தேஜஸ்வினி தனது மகள் விஸ்மிதா மற்றும் மகன் விஹானை ஒரு பிளேஸ்கூலில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல, தனது கணவர் லோஹித் சோலக்குடன் சென்றுக் கொண்டிருந்தார், இந்த விபத்தில் லோஹித் சோலக் மற்றும் விஸ்மிதா உயிர் தப்பினர்.
இதையும் படியுங்கள்: 9 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரைத்த கொலீஜியம்; ஒருவர் மூன்றாவது முறை
BMRCL ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்ததைத் தொடர்ந்து, இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்த நிலையில், தேஜஸ்வினியின் தந்தை மதனின் கருத்துக்கள் வந்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய மதன், இது இழப்பீடு பற்றியது அல்ல. “எனக்கு அவர்களின் இழப்பீடு தேவையில்லை. அவர்களுக்கு நான் ரூ.1 கோடி தருகிறேன். எனது மகள் மற்றும் பேரன் உயிரை முதல்வர் மீட்டுத் தர முடியுமா? இது பணத்தைப் பற்றியது அல்ல. BMRCL மற்றும் ஒப்பந்ததாரர் நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றில் ஒரு தெளிவான குறைபாடு உள்ளது,” என்று அவர் கூறினார்.
“எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை அரசாங்கம் தடுத்து உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒப்பந்ததாரரை அரசு கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும், அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், நூற்றுக்கணக்கான பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். மிக விரைவில், அவர் இதை செய்ய வேண்டும், ”என்று மதன் கூறினார்.
செவ்வாய்கிழமை இரவு, தேஜஸ்வினியின் உடல் அவரது சொந்த ஊரான தாவங்கரேவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.
இதனிடையே, BMRCL மற்றும் நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார். நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட்டின் ஜூனியர் இன்ஜினியர் பிரபாகர், இயக்குநர் சைதன்யா, சிறப்பு திட்ட மேலாளர் மத்தாய், திட்ட மேலாளர் விகாஸ் சிங், மேற்பார்வையாளர் லக்ஷ்மிபது, BMRCL நிறுவனத்தின் செயல் பொறியாளர் மகேஷ் பெண்டேகாரி மற்றும் துணை தலைமை பொறியாளர் வெங்கடேஷ் ஷெட்டி ஆகியோர் எப்.ஐ.ஆரில் பெயரிடப்பட்டுள்ளனர்.
கோவிந்தபுரா காவல் துறையினர், இந்திய தண்டனைச் சட்டம் 336 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து அல்லது தனிப்பட்ட பாதுகாப்புச் சட்டம்), 337 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயலால் காயம் ஏற்படுத்துதல்), 304 (அ) (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 427 (ஐம்பது ரூபாய் அளவுக்கு சேதம் விளைவிக்கும் செயல்) ஆகிய பிரிவுகளில் BMRCL தளப் பொறியாளர் மற்றும் அந்த அமைப்பின் பிற தொழிலாளர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதன்கிழமை, திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகளின் விவரங்களையும் அவர்கள் சேகரித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil