/indian-express-tamil/media/media_files/2025/09/29/lawrence-bishnoi-2025-09-29-22-27-29.jpg)
பிரபல நிழலுலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது கனடா
பிரபல நிழலுலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை குற்றவியல் சட்டத்தின் கீழ் தீவிரவாத அமைப்பாக கனடா அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், கனடாவில் உள்ள யாரும் இக்குழுவுக்கு நிதி (அ) பொருள் உதவி வழங்குவது தடை செய்யப்படுகிறது. அத்துடன், இந்த அமைப்பின் சொத்துக்களை முடக்குதல், உடைமைகளைப் பறிமுதல் செய்தல், அதன் உறுப்பினர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய புதிய அதிகாரங்கள் சட்ட அமலாக்கத் துறைக்கு கிடைத்துள்ளன.
பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரீ, இந்த அறிவிப்பு சட்ட அமலாக்கத் துறைக்கு "வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மூலம் அச்சத்தை விதைக்கும் ஒரு குழுவை எதிர்த்துப் போராட மேம்படுத்தப்பட்ட அதிகாரங்களை" வழங்குகிறது என்று கூறினார். ராஜஸ்தானில் தோன்றி, தற்போது சர்வதேச குற்றக் குழுமமாக செயல்படும் இந்த அமைப்புக்கு லாரன்ஸ் பிஷ்னோய் தலைமை தாங்குகிறார்.
பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்டாரியோ மற்றும் ஆல்பர்ட்டா ஆகிய மாகாணங்களில் தீவிரமாக செயல்படும் இந்தக் கும்பல், 2023 முதல் 50-க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையது. முக்கியமாக, பஞ்சாபி இசைக் கலைஞர்களான ஏ.பி. தில்லான் மற்றும் கிப்பி கிரேவால் ஆகியோரின் வீடுகளில் தீவைத்துக் குண்டு வீசிய சம்பவங்கள். இந்த ஆகஸ்ட் மாதம், நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் சரேயில் உள்ள காபியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. தெற்காசிய சமூகத்தினரைக் குறிவைத்து நடத்தும் பரவலான மிரட்டிப் பணம் பறிக்கும் (Extortion) கும்பல் நடவடிக்கைகளிலும் இது ஈடுபட்டுள்ளது. இந்த அறிவிப்பு பல மாதங்களாகக் கனடாவில் நிலவிய அரசியல் மற்றும் சமூக அழுத்தங்களுக்குப் பிறகு வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் எபி, "எங்கள் மண்ணில் அரசு ஆதரவுடனான பயங்கரவாதம்" நடப்பதாகக் குறிப்பிட்டு, கனடா பிரதமர் மார்க் கார்னியை இக்கும்பலை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வலியுறுத்தினார். ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் டானியல் ஸ்மித் ஜூலையிலும், பிராம்ப்டன் மேயர் பாட்ரிக் பிரவுன் மற்றும் சரே மேயர் பிரிண்டா லாக் ஆகியோரும் இதே கோரிக்கையை முன்வைத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவர் ஆகஸ்ட் மாதம் இக்கோரிக்கையைத் தனது குற்றவியல் கொள்கையுடன் இணைத்துப் பேச, புதிய ஜனநாயகக் கட்சி (NDP) நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். செப்.11 அன்று, நிழல் பொது பாதுகாப்பு அமைச்சர் ஃபிராங்க் கபுட்டோ அதிகாரப்பூர்வமாக இந்த நடவடிக்கைக்கு வேண்டுகோள் விடுத்தார்.
2024 அக்டோபரில், ஆர்.சி.எம்.பி. ஆணையர் மைக் டூஹீம், இந்தக் கும்பலை அரசு ஆதரவுடனான நடவடிக்கைகளுடன் இணைத்து பேசினார். குறிப்பாக, 2023 ஜூன் மாதம் சரேயில் நடந்த காலிஸ்தான் ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையுடன் இதைத் தொடர்புபடுத்தினார். இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது. மாறாக, அந்தக் கும்பலின் அச்சுறுத்தல்கள் குறித்து கனடாவுக்கு எச்சரித்ததாகவும், அதன் நிதிப் பாய்ச்சலைக் குலைக்க ஒத்துழைத்ததாகவும் இந்தியா கூறியது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்த அறிவிப்பு காவல்துறைக்கு புதிய வாய்ப்புகளை கொடுத்தாலும், அதன் தாக்கம் குறைவாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கனடாவின் குற்றவியல் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதில் உள்ள திறன் பற்றாக்குறையே முக்கியப் பிரச்னை என்று சர்வதேச ஆளுமை கண்டுபிடிப்பு மையத்தின் (Centre for International Governance Innovation) வெஸ்லி வொர்க் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் நடந்த ஜி7 மாநாட்டிற்குப் பிறகு இரு நாடுகளின் உயர் தூதுவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்ட நிலையில், கனடா-இந்தியா உறவுகள் சீரடையும் அறிகுறிகளைக் காட்டும் வேளையில் இந்தக் குழும அறிவிப்பு வந்துள்ளது. இந்திய அதிகாரிகள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், கோல்டி பிரார் உட்பட பிஷ்னோய் கூட்டாளிகளுக்கு எதிரான நாடு கடத்தல் வழக்குகளில் (Extradition) ஒட்டாவாவின் கையை இது வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, 2023 ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் மே 2024-இல் கைது செய்யப்பட்ட கரண் பிரார் (கோல்டி பிராருடன் தொடர்பில்லாதவர்) மற்றும் கரண்ப்ரீத் சிங் ஆகியோரையும் பிஷ்னோய் கும்பலுடன் ஆர்.சி.எம்.பி. இணைத்தது.
பிஷ்னோய் கும்பலின் கனடாவில் உள்ள செயல்பாடுகள், கோல்டி பிரார் என்ற 29 வயது ரவுடி மூலம் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சரேயில் வசிக்கிறார். 2017-ல் ஒரு மாணவர் விசா மூலம் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற பிரார், நீண்ட காலமாகப் பிஷ்னோயின் முக்கிய உதவியாளராகவும், வெளிப்படையான முகமாகவும் உள்ளார். 2022இல் பஞ்சாபி ராப்பர் சித்து மூஸ் வாலா கொலையின் பொறுப்பை இவர் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார். அன்றிலிருந்து அவர் கனடாவிலிருந்து மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை நடத்தி வருகிறார்.
பெரும்பாலும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட செயலிகளைப் பயன்படுத்திச் சிறையில் உள்ள பிஷ்னோயின் நெட்வொர்க்குடன் ஒருங்கிணைத்து இலக்கு வைக்கப்பட்ட கொலைகளைச் செய்து வருகிறார். ஜூன் 2025-ல் பிஷ்னோய் மற்றும் பிராருக்கு இடையே பிளவு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டாலும், புலம்பெயர் வணிகர்களைக் குறிவைக்கும் பிஷ்னோயின் விரிவான மிரட்டிப் பணம் பறிக்கும் நெட்வொர்க்குடன் இவர் இன்னும் இணைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்தப் பிஷ்னோய் கும்பல், பிராம்ப்டனில் உள்ள 'பிரதர்ஸ் கீப்பர்ஸ்' போன்ற சிறிய குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு பஞ்சாபி இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு எதிராகத் தீவைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2023 முதல், கனடாவில் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய ஏராளமான வன்முறை சம்பவங்களை ஆர்.சி.எம்.பி. ஆவணப்படுத்தியுள்ளது. 2024 அக்.14 அன்று ஒட்டாவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், உதவி ஆணையர் பிரிகெட்டே கவுவின் மற்றும் ஆணையர் மைக் டூஹீம் ஆகியோர் இந்தக் கும்பலின் "கொலைகள் மற்றும் வன்முறைச் செயல்களில்" உள்ள பங்கைத் தெளிவாக எடுத்துரைத்தனர். இதில் 2023 செப்டம்பரில் எட்மண்டனில் காலிஸ்தானுடன் தொடர்புடைய ஒருவரான சுக்தூல் சிங் கில்லின் கொலை அடங்கும். இதற்கு இந்தக் கும்பல் ஆன்லைனில் பொறுப்பேற்றது. அத்துடன் 2025 ஜூலையில் பிராம்ப்டன் தொழிலதிபர் ஹர்ஜித் சிங் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஃபேஸ்புக்கில் பிஷ்னோய்யுடன் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.