Cancer Patient held under PSA : தெற்கு காஷ்மீரில் அமைந்திருக்கிறது குல்காம் என்ற ஊர். அந்த ஊரில் வசித்து வந்த பர்வைஸ் அகமது பல்லா என்ற 33 வயது இளைஞர் ஒருவரை பொதுபாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 6ம் தேதி கைது செய்துள்ளது காஷ்மீர் காவல்துறை. மாநிலம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மதிபக் என்ற கிராமத்தில் கைது செய்யப்பட்ட பல்லாவை உத்திரப்பிரதேசம் மாநிலம் பரெய்லியில் இருக்கும் சிறையில் அடைத்துள்ளனர் காவல்துறையினர்.
புற்றுநோயால் அவதியுற்றுவரும் என் மகனை விடுதலை செய்யுங்கள் என்று ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் பல்லாவின் பெற்றோர்கள். ஸ்ரீநகரில் இருக்கும் எஸ்.கே.ஐ.எம்.எஸ் என்ற மருத்துவமனையில், நியூக்கிளியர் துறையின் தலைவர் டாக்டர் தன்வீர் ஆர் ரத்தேர் இது குறித்து கூறுகையில் “பல்லாவிற்கு புற்றுநோய் உள்ளது. அவரை வாழ்வைப்பது அவரின் உயிர்காக்கும் மருந்துகள் தான். அவர் தொடர்ந்து வெளிப்பிரிவு மருத்துவமனையில் மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மருத்துவ அறிக்கையை ஏற்கனவே குல்காம் மாவட்ட ஆட்சியரிடம் பல்லாவின் பெற்றோர்கள் அளித்துள்ளனர்.
காவல்துறையில் வைக்கப்பட்டிருக்கும் ஆவணங்களில் “போராட்டக்காரர்களுக்கு மறைமுகமாக தன்னுடைய ஆதரவையும், ஆயுதங்கள் மற்றும் இதர உதவிகளை அளிப்பவர்கள், இந்தியாவில் இருந்து ஜம்மு-காஷ்மீர் பிரிய வேண்டும் என விரும்புபவர்களை காவலில் வைப்பது தான் முறையே. இந்த இக்கட்டான சூழலில் இது போன்ற நபர்களை தனியாக இயங்கவிட்டால் அது நாட்டுக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பிரச்சனையாய் அமைந்துவிடும்” என்று கூறப்பட்டுள்ளது. கலகம் செய்யும் நோக்கில் இருந்தவர்கள் என்று, குல்காம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (83/2017) பல்லாவின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும் அவர் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற அமைப்பை சேர்ந்தவர் என்றும் அந்த அமைப்பிற்காக வேலை செய்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். குல்காம் துணை ஆணையர் ஷவ்கத் ஐஜாஜிடம் கேட்கும் போது, இது குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் இது என்று விசாரணை செய்வதாக உறுதி கூறினார்.
பல்லாவின் உடல் நலம் குறித்து மருத்துவமனை அறிக்கைகளை அதிகாரிகளிடம் அளித்துள்ளனர் பல்லாவின் குடும்பத்தினர். அந்த அறிக்கை அக்டோபர் 26, 2018ம் ஆண்டு என்று தேதியிடப்பட்டிருந்தது. ரீஜினல் கேனசர் செண்டரில் MRD No 002324 & 436314 - என்ற மருத்துவப்பதிவேட்டில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு தினமும் மருந்துகள் முறையாக அளிக்கப்பட வேண்டும் என்றும் அடிக்கடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்லாவின் தந்தை முகமது ஆயுப் பல்லா “பல்லாவை கைது செய்யும் போது, அவனுக்கான மருந்துகளை அவன் எடுத்துக் கொள்வதற்கான அவகாசம் வழங்கப்படவில்லை. நான் பரேய்லியில் அவனை சந்திக்க போகும் போது என்னை அனுமதிக்கவில்லை. அவனுக்கான மருந்துகளையாவது அவனிடம் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டுக் கொண்ட போதும் அதனையும் மருத்துவிட்டனர்” என்று வருத்தத்தோடு கூறினார்.