பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சகங்கள் தங்களது வளர்ச்சி திட்டங்களில் சுகாதார காரணிகளை இணைக்குமாறு வலியுறுத்திய நிலையில், சுகாதாரத் துறை அமைச்சகம் அதனை முதல் துறையாக அமல்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அமைச்சகத்தின் அலுவலகத்தில் ஹெல்தி உணவுகள் கொண்ட கேண்டீனைத் தொடங்குமாறு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மீண்டும் பரபரப்பாகும் பாஜக அலுவலகம்
பல மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், அமைச்சர்கள் போட்டியிடவுள்ளதால், அசோகா சாலையில் உள்ள பாஜகவின் பழைய தலைமையகம் மீண்டும் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளது.
உபாத்யாய் மார்க்கில் உள்ள தற்போதைய கட்சி தலைமையகத்தை விட அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு அருகில் இருப்பதால் கட்சித் தலைவர்கள் இங்கு சந்திக்க திட்டமிடுகிறார்கள்.
புதன்கிழமை அன்று, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் அருண் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ஜே பி நட்டா கலந்து கொள்ளவில்லை.
அறிக்கையின் நிலை என்ன?
அக்டோபர் 16-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அரசியல் நிலவரம், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கட்சித் தலைவர்களில் சிலர், மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடந்த மாநிலத் தேர்தலில் கட்சியின் தோல்வி குறித்து ஐந்து பேர் கொண்ட குழு சமர்ப்பித்த அறிக்கை குறித்து ஏன் விவாதிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர். ஏனென்றால், காங்கிரஸ் தோல்வி அடைந்தபோது, இதுதொடர்பாக அறிக்கை சமர்பிக்குமாறு செயற்குழு கூட்டம் தான் அறிவுறுத்தியது. அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரியில் காங்கிரஸை மீண்டும் மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கை மீது இதுவரை உயர்மட்ட குழுவில் விவாதிக்கவில்லை.
பல தலைவர்கள் கூறுவது என்னவென்றால், 2014 லோக்சபா தோல்வி குறித்த ஏ.கே.அந்தோணி கமிட்டி அறிக்கை சமர்ப்பித்த போதும், அறிக்கை குறித்து எவ்வித விவாதமும் நடத்திடவில்லை. எனவே, அதே நிலை தற்போதும் உருவாகலாம் என்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil