scorecardresearch

‘நான் அவமானப்படுத்தப்பட்டேன்’ – பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா

மாலையில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்று முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

punjab cm

பஞ்சாப் முதலமைச்சர் பதவியை அமரீந்தர் சிங் இன்று (செப்டம்பர் 18) ராஜினாமா செய்தார்.

பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவரது ஆதரவு எம்எல்ஏக்களை சந்தித்த பிறகு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார்.

கடந்த பல மாதங்களாக, பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருந்தது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்ட பிறகு, காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி அதிகரித்து வந்தது.

ராஜினாமா செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமரீந்தர், “நான் அவமானப்படுத்தப்பட்டேன். என் வேலையில் சந்தேகம் இருப்பதாக உணர்கிறேன். 52 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எனது ஆதரவாளர்களுடன் பேசியபிறகு, அரசியலில் எனது எதிர்காலத்தை முடிவு செய்வேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக இன்று காலை, காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக அமரீந்தரை பதவி விலகுமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு முதலமைச்சர் பதவியைக் கொடுக்க அவர் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, சோனியா காந்தியிடம் பேசிய அமரீந்தர், இதுபோன்ற “அவமானத்தை” எதிர்கொள்வதை விட பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாகக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் தேர்தல்

அடுத்தாண்டு பஞ்சாப் மாநில சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவரின் விலகல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமரீந்தரின் முதன்மை செயலாளரான சுரேஷ் குமார், அரசியல் செயலாளரான கேப்டன் சந்தீப் சந்து ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

அடுத்த முதல்வர் யார்?

மாலையில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்று முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

முன்னாள் பிசிசி தலைவர் சுனில் ஜக்கார், ஒரு காலத்தில் முதல்வரின் நெருங்கிய வட்டாரத்திலிருந்தவர். இவரின் பெயர் முதல்வர் பதவிக்குப் பரிசீலிக்கப்படும் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Capt amarinder resigns as cm