காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், பஞ்சாப் முதல்வராகவும் இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வந்தது. இவர் காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டதற்கு, அமரீந்தர் சிங் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டியின் காரணமாக முதல்வர் பதவியிலிருந்து கடந்த செப்.18 அன்று அமரீந்தர் ராஜினாமா செய்தார்.
அன்று முதலே பஞ்சாப் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமரீந்தர் தனித்துப் போட்டியிடுவாரா அல்லது பாஜகவில் இணைவாரா என்ற குழப்பம் இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று, பதவியை ராஜினாமா செய்ததற்குப் பிறகு முதன்முறையாக அமரீந்தர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அவர் பேசுகையில், “நான் புதிய கட்சியைத் தொடங்க உள்ளேன். தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்த உடன் கட்சி சின்னத்துடன் அறிவிப்பு வெளியாகும்.இதற்காக எனது வழக்கறிஞர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியானதும், நிச்சயம் 117 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். காங்கிரஸ்காரர்கள் பலர் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள். பாஜகவுடன் தொகுதி பங்கீடு செய்யப்படும். பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என சொல்லவில்லை” என்றார்.
மேலும் பேசிய அவர், ” கடந்த 4.5 ஆண்டுகளில் நாங்கள் நிறைவேற்றிய செயல்திட்டங்கள் குறித்த அனைத்து விஷயங்களும் என்னிடம் இருக்கின்றன. நான் அளித்த வாக்குறுதிகளில் 92 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளேன். நமது எல்லைப் பகுதியில் ஸ்லீப்பர் செல்கள், ஐஎஸ்ஐ, காலிஸ்தான் ஆகியோரால் ஆபத்து நிலவுகிறது. எனவே இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டும் எந்தவொரு அரசும் பொறுப்பற்ற நிலையில் இருப்பதைத் தான் காட்டும்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லை பாதுகாப்புப் படையினரை நிறுத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. இது பஞ்சாப் மாநிலத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது
எந்த அரசியல் கட்சியும் தலையிட விடமாட்டோம் என்று விவசாயிகள் கூறியதால், நான் அவர்களது போராட்ட களத்தில் இல்லை.ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொடர்பில் இருக்கிறேன். நாளை அவரை சந்திக்கவுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil