Car hits CRPF bus : பிப்ரவரி 14ம் தேதி, ஜம்முவிற்கு அருகில், புல்வாமா என்ற இடத்தில், ராணுவத்தினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பலியாகினர். அதனுடைய பதற்றம் சற்றும் ஓயாத நிலையில் நேற்று மீண்டும் சி.ஆர்.பி.எஃப். படையினர் வந்து கொண்டிருந்த பேருந்தின் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றுள்ளது.
விசாரணை தீவிரப்படுத்தப்படும் - ஜம்மு - காஷ்மீர் ஆளுநர்
சி.ஆர்.பி.எஃப். படையினர் வந்து கொண்டிருந்த பேருந்தின் மீது மிக வேகமாக வந்த கார் மோதி, தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. காருக்கு மட்டும்மே பலத்த சேதாரம். பேருந்தில் வந்த அனைவரும் எந்த காயமும் இன்றி உயிர்தப்பினர்.
இந்த சம்பவம் நேற்று காலை 10.30 மணி அளவில், ஜவஹர் டன்னல் அருகே, பனிஹால் என்ற இடத்தில் ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றது.
சம்பவம் நடைபெற்று ஒரு நாள் ஆன நிலையிலும், அந்த காரை (ஹூண்டாய் சாண்ட்ரோ) ஓட்டி வந்தவர் நிலை குறித்தோ, அவர் எங்கே சென்றார் என்ற தகவலோ இது வரையிலும் கிடைக்கவில்லை.
ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் இது குறித்து தெரிவிக்கையில், இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
காவல் துறை விசாரணை
ஜம்மு மண்டல ஐஜிபி எம்.கே.சின்ஹா இது குறித்து தி சண்டே எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் “ஐ.ஈ.டி மற்றும் டெட்டனேட்டர்கள், அந்த காரில் இருந்து கண்டறியப்பட்டது. மேலும் ஒரு துண்டுக் காகிதத்தில் இந்த சம்பவத்திற்கு ஹிஜ்புல் முஜாஹூதின் அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், 1947ற்கு பிறகு காஷ்மீர் மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் அத்துமீறல்கள் விளைவாகவே இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும் அதில் எழுதப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அம்மாநில ஆளுநர் தெரிவிக்கையில், "காரின் உள்ளே எந்த விதமான வெடிபொருட்களும் கண்டறியப்படவில்லை. இரண்டு எல்.பி.ஜி. சிலிண்டர்களில் ஒன்று வெடித்துள்ளது. மற்றொன்று வெடித்து சிதறிய பொருட்களில் ஒன்றாக சாலையில் கிடந்தது. முழுமையான விசாரணைக்கு பின்பே இது தீவிரவாத தாக்குதலா என்று கூற இயலும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே போக்குவரத்து சீர் செய்யப்பட்டு, மக்களின் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.