கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சமீபகாலமாக நவீனரக கார்கள் அதிகளவில் திருடுபோவது குறித்த விசாரணையில் களமிறங்கிய போலீசார், இதன் பின்னணியில் தமிழர்கள் இருவர் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
பெங்களூருவின் தென்கிழக்கு பகுதியில் கார்கள் அதிகளவில் திருடுபோவதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரைணயின் முடிவில் தமிழர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் சென்னையை சேர்ந்த சதாம் ஹூசைன் மற்றொருவர் வேலூரை சேர்ந்த பாபு என்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, பெங்களூரு (தென்கிழக்கு) போலீஸ் துணை கமிஷனர் இஷா பண்ட் கூறியதாவது, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கார் மெக்கானிக். அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் உயர்ரக கார்களை முதலில் இவர்கள் அடையாளம் காணுகின்றனர். பின் அவர்கள், புளூடூத் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட டேப்லெட்டின் மூலம், அந்த காரை விற்பனை செய்த ஷோரூம் ஊழியரின் உதவியுடன் காரை திறந்து திருடி வந்துள்ளனர். அவர்கள் அந்த கார்களை சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விற்று லாபம் பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இதுவரை ரூ.1 கோடி மதிப்பிலான 10க்கும் மேற்பட்ட கார்களை திருடி கள்ளச்சந்தையில் விற்று வந்துள்ளதாக போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.