scorecardresearch

கத்தோலிக்க பள்ளியை சேதப்படுத்திய இந்து அமைப்புகள்; சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்யும் போலீஸ்

மத்தியப் பிரதேசத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவப் பள்ளி மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Catholic school vandalized by Hindutva groups, Catholic school in Madhya Pradesh vandalized by Hindu groups, VHP, Bajrang Dal, கத்தோலிக்க பள்ளியை சேதப்படுத்திய இந்துத்துவ கும்பல், மத்தியப் பிரதேசம், விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், மத்தியப் பிரதேசம், இந்துத்துவ கும்பல், Madhya Pradesh, Hindu Groups, Catholic school vandalized

மத்தியப் பிரதேசம், விதிஷா மாவட்டம், கஞ்ச் பசோடா தாலுகாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவப் பள்ளியை திங்கள்கிழமை பிற்பகல் பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் செயற்பாட்டாளர்கள், பள்ளி அதிகாரிகள் மதமாற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டி சேதப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

நேற்று (டிசம்பர் 6) மதியம் 12:10 மணியளவில், செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே சுமார் 300 பேர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தபோது – பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து கொண்டிருந்துள்ளது. அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறிது நேரத்தில் வன்முறையில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியது. அந்த அமைப்பினர் இரும்பு கம்பிகள் மற்றும் ஆயுதம், கற்களைக் கொண்டு பள்ளியை சேதப்படுத்தியதாகவும் அவர்கள் பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தும்போது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டதாகவும் பள்ளி முதல்வர் அந்தோணி டைனும்கல் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

காவல்துறை இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தாமல் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக குற்றம் சாட்டிய அந்தோணி டைனும்கல் கூறினார். “நாங்கள் காவல் துறையினரிடம் பாதுகாப்புக் கோரினோம். மேலும், அவர்கள் ஒரு சில முழக்கங்களை மட்டுமே எழுப்பி அமைதியாக கலைந்து செல்லும் என்று அவர்கள் எங்களுக்கு உறுதியளித்தனர். அப்போதும் கூட, அவர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நம்பினோம். ஆனால், போலீசார் வரத் தவறிவிட்டனர்… குண்டர்கள் போன பிறகு போலீசார் வந்தனர்.” என்று அந்தோணி டைனும்கல் குற்றம் சாட்டினார்.

கஞ்ச் பசோடா தாலுகாவின் துணை-பிரிவு போலீஸ் அதிகாரி பாரத் பூஷன் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். போலீஸ் அதிகாரி பாரத் பூஷன் கூறுகையில், “இது ஒரு அமைதியான போராட்டமாக இருந்திருக்க வேண்டும்… ஆனால், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு சில விஷமிகள் பள்ளி கட்டிடத்தின் கண்ணாடி மீது கற்களை வீசி அதை சேதப்படுத்தினர்… பள்ளி அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை [ஆனால்] உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

அவர்கள் மீது போலீசார் ஐபிசி பிரிவு 147 (கலவரம்), 148 (கொடிய ஆயுதங்களுடன் கலவரம் செய்தல்) மற்றும் 427 (ரூ. 50 அளவுக்கு சேதம் விளைவித்த நடவடிக்கை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நிலைமையை ஆய்வு செய்ய விதிஷா எஸ்பி மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் பள்ளிக்கு வருகை தந்துள்ளதாக பூஷன் கூறினார்.

செயின்ட் ஜோசப் பள்ளி 11 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. போபாலை தளமாகக் கொண்ட அசிசி மாகாணத்தின் மலபார் மிஷனரி சொசைட்டியால் நடத்தப்படுகிறது. பள்ளியில் சுமார் 1,500 மாணவர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் இந்துக்களாவர்.

பள்ளியில் நடந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் நீலேஷ் அகர்வால், ஊடகங்களில் கூறுகையில், அக்டோபர் 31ம் தேதி பள்ளியில் 8 இந்து சிறுமிகள் மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறினார். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ மற்றும் மாவட்ட ஆட்சியர் விதிஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறினார்.

இருப்பினும், பள்ளி முதல்வர் அந்தோணி டைனும்கல், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். அக்டோபர் 31ம் தேதி பள்ளி தனது கிறிஸ்தவ மாணவர்களுக்கு புனித ஒற்றுமையை ஏற்பாடு செய்ததாகக் கூறினார். “அந்த நிகழ்வின் வீடியோ யூடியூப்பில் பரப்பப்பட்டது. பள்ளி மாணவர்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக பொய்யாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் யாரும் இந்த பள்ளியில் படிப்பவர்கள் இல்லை” என்று கூறினார்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர், மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியும், மாவட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீலேஷ் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். “இது முற்றிலும் ஆதாரமற்ற புகார் என்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை” என்று அந்தோணி டைனும்கல் கூறினார்.

பள்ளி அதிகாரிகளுக்கு எதிரான மதமாற்ற புகார் ஆதாரமற்றது என்றும், வெளியான வீடியோ தவறானது என்றும் பூஷன் தெளிவுபடுத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Catholic school vandalized by hindutva groups in madhya pradesh