கர்நாடகா அணைகளை பார்வையிட ரஜினிகாந்த் வரவேண்டும் என முதல்வர் பதவியை ஏற்க இருக்கும் குமாரசாமி வேண்டுகோள் விடுத்தார்.
கர்நாடகா முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் தளைவர் ஹெச்.டி.குமாரசாமி, வருகிற புதன்கிழமை (மே 23) பதவி ஏற்கிறார். இதையொட்டி பல்வேறு கோவில்களுக்கு சென்று அவர் வழிபாடு நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக குமாரசாமி நேற்று மாலை 6.10 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் இரவு 7 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஹேமநாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் தரப்பில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், உதவி ஆணையர் ரத்தினவேல் ஆகியோர் குமாரசாமிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
அதன்பிறகு அவர் பேட்டரி கார் மூலம் ஆரியபட்டாள் வாசல் வரை சென்றார். அங்கு கொடிகம்பத்தை தொட்டு வணங்கி விட்டு மூலவர் ரெங்கநாதரை தரிசித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தாயார் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த குமாரசாமி நிருபர்களிடம் பேசுகையில், ‘தமிழ்நாடும், கர்நாடகமும் சகோதரர்கள் மாதிரி! தண்ணீர் பிரச்சினையால் தமிழக விவசாயிகளும், கர்நாடக விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ரெங்கநாதர் அருளால் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி நதிநீர் பங்கீடு சுமுகமாக இருக்க வேண்டிக்கொள்கிறேன். 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்த காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு தருவதாக கூறி உள்ளது. அதனால் 5 ஆண்டுகள் சுமுகமாக ஆட்சியை முடிப்பேன். தண்ணீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். இதற்கு தமிழகம் ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்றார்.
இரவு 8 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வெளியே வந்த குமாரசாமி பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த அவர், இரவு 9.40 மணிக்கு பெங்களூருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, குமாரசாமி திருச்சி வந்ததும் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபித்து புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பிறகு தான் காவிரி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும். காவிரி விவகாரத்தில் சில பிரச்சினைகளை இரு தரப்பிலும் சந்திக்கிறோம். கர்நாடக விவசாயிகளும், தமிழக விவசாயிகளும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அவை சரி செய்யப்பட வேண்டும். காவிரி பிரச்சினையை தீர்க்க முழு ஒத்துழைப்பு அளிப்பேன். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எனது அரசு மட்டுமல்ல. யாராக இருந்தாலும் மதித்துத்தான் ஆக வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடகத்தில் ஆறுகள் வறண்டுபோய் கிடந்தன. இதனால் தான் இரு மாநிலங்களிலும் பிரச்சினை உருவானது. ஆனால் இந்த ஆண்டு ரெங்கநாதர் அருளால் நல்ல மழை பெய்து எங்கள் மாநிலத்தில் ஆறுகள் நிரம்பும் பட்சத்தில் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் எந்த சிரமமும் இருக்காது. எனது அரசு 5 ஆண்டுகள் நிலைத்து இருக்கும். அதுமட்டுமின்றி சிறந்த நிர்வாகத்தையும் தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்து இருப்பதாக கூறி, குமாரசாமியிடம் பெங்களூருவில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது: ‘கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. அப்படி இருக்க தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை. நான் ரஜினிகாந்துக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து நீங்கள் கர்நாடகத்திற்கு வாருங்கள். இங்குள்ள அணைகளின் நீர் இருப்பு பற்றி முதலில் அறிந்து கொள்ளுங்கள்.
எங்கள் மாநில விவசாயிகள் நிலை எப்படி இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டுமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரலாம்.’ இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.