காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை தம்பிதுரை சந்தித்து பேசினார். 3 மாநில தேர்தல் வெற்றிக்கு பாஜக.வுக்கு வாழ்த்தும் கூறினார் அவர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த 16-ம் தேதி இறுதி உத்தரவில் கூறியிருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதுவரை இதில் தனது நிலையை வெளிப்படையாக கூறவில்லை. மத்திய நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, ‘அது சாத்தியமில்லை’ என்கிற ரீதியில் கருத்து கூறினார். ஆனால் அந்தத் துறையின் இணை அமைச்சர், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி தொடங்கிவிட்டது’ என கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அங்கு ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜக அந்த மாநில கோரிக்கையை புறம் தள்ளுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தவே தமிழ்நாடு போராடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இன்று கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தின் இரு அவைகளிலும் காவிரி பிரச்னையை தமிழ்நாடு எம்.பி.க்கள் எழுப்பினர். பின்னர் அவை ஒத்தி வைக்கப்பட்டதும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பிரதமர் நரேந்திர மோடியை 10 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகியவற்றில் பாஜக அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார் தம்பிதுரை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் பிரதமர் மோடியிடம் அவர் பேசினார். பின்னர் அதிமுக எம்.பி.க்கள் சகிதமாக நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய தம்பிதுரை, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இரு அவைகளிலும் அதிமுக எம்.பி.க்கள் இன்று அவைத்தலைவரை முற்றுகையிட்டனர். எனவே அவை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் அம்மாவின் கொள்கை. அவரால் உருவாக்கப்பட்ட நாங்கள் அதற்காக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமரை சந்தித்தபோது 3 மாநில தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன்’ என்றார் தம்பிதுரை.
‘10 நிமிடம் பேசினீர்களே? வேறு என்ன பேசினீர்கள்?’ என நிருபர்கள் கேட்டபோது, ‘வாழ்த்து மட்டும்தான் கூறினேன்’ என்றார் தம்பிதுரை. ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்களே?’ எனக் கேட்டபோது, ‘அரசியலுக்காக அவர்கள் இந்த கோரிக்கையை வைக்கிறார்கள். நாங்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். எங்கள் தலைமை உத்தரவிட்டால், ராஜினாமா செய்வோம்’ என்றார்.
‘உள்கட்சி பிரச்னை குறித்து பிரதமரிடம் பேசினீர்களா?’ எனக் கேட்டபோது, ‘கட்சிப் பிரச்னையை பேசவில்லை’ என்றார் தம்பிதுரை.