காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் டெல்லி கூட்டத்தில் மத்திய அரசு பின்வாங்கியது. எனவே சனிக்கிழமை எடப்பாடி அவசர ஆலோசனை நடத்துகிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், என்பது காவிரி நடுவர் மன்றம் வழங்கிய உத்தரவு! அந்த உத்தரவை அரசிதழில் வெளியிட்ட அன்றே மத்திய அரசு அதை செயல்படுத்த முனைந்திருக்க வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா, அமையாதா? என இழுபறி நீடிக்கிறது.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை அமுல்படுத்துவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று (மார்ச் 9) காவிரி பாசனத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர்களின் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில தலைமைச் செயலர்கள் கலந்து கொண்ட கூட்டம் டெல்லி நீர்வளத்துறை அமைச்சகத்தில் நடந்தது.
மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபயேந்திர பிரசாத் சிங் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்து கூட்டத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். கர்நாடகா மாநில அதிகாரிகள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது பற்றி முடிவு செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என்று கருத்து கூறினர்.
தமிழக அதிகாரிகள், காவிரி மேலாண்மை வாரியத்தை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மேலும் தமிழ்நாட்டுக்கு இந்த மாதம் காவிரியில் திறந்து விட வேண்டிய தண்ணீரை இடைக்கால நடவடிக்கை என்ற அடிப்படையிலாவது திறந்துவிட வேண்டும் என்றும் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.
அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக 4 மாநிலங்களும் தங்கள் செயல் திட்டங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. கர்நாடக அரசு நாளையே தனது செயல்திட்டத்தை தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இல்லை என்றும் கர்நாடகம் கூறியிருக்கிறது. மத்திய நீர்வள அதிகாரிகளும் காவிரி மேலாண்மை வாரியம் என்பதை மறுத்து, ‘ஸ்கீம்’ என்கிற வார்த்தையே உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருப்பதாகவும், அதையே அமுல்படுத்துவது குறித்து பேசுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, வேறு தீர்வையே கர்நாடக அரசு முன்வைக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மதியம் அவசர கூட்டம் நடக்க உள்ளது. இதில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டெல்லியில் இன்று நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தக் கூட்டத்தை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கருத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டிய அவசியத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் அது தொடர்பாக குறிப்பிட்டிருக்கும் அம்சங்களையும் சேர்த்து புதிய மனுவை மத்திய அரசிடம் தமிழ்நாடு சார்பில் தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.