காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கை. காவிரி நடுவர் மன்றம் இதற்கான இறுதி உத்தரவை கடந்த 2007-ம் ஆண்டு பிறப்பித்தது. அதன்பிறகு உச்ச நீதிமன்றமும் இருமுறை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவுகளை பிறப்பித்தது. ஆனாலும் அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை.
காவிரி வழக்குகளில் இறுதி உத்தரவை கடந்த பிப்ரவரி 16-ம் தேதி பிறப்பித்த உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய நீரின் அளவில் மட்டும் மாற்றம் செய்தது. இதை அமல்படுத்த 6 வாரங்களில் ஸ்கீம் உருவாக்க கேட்டுக்கொண்டது. ஆனால் 6 வார முடிவில் மேலும் அவகாசம் கேட்ட மத்திய அரசு, ‘ஸ்கீம்’ என்பதற்கும் விளக்கம் கேட்டது.
ஆனால் ‘ஸ்கீம்’ பற்றி எதுவும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வில்லை. மே 3-ம் தேதிக்குள் தெளிவான செயல் திட்டத்தை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று மத்திய அரசு சார்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘காவிரி செயல் திட்டம் உருவாக்க மேலும் 2 வாரம் அவகாசம் தேவை’ என கேட்கப்பட்டிருக்கிறது.
காவிரி வழக்கில் மேலும் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மே 12-ல் நடைபெற இருக்கும் கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு அவகாசம் கேட்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.