காவிரி மேலாண்மை வாரியம், ‘கனவு’தான் : மத்திய அரசு நிலைப்பாடு இது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்ற உத்தரவில் இல்லை. எனவே அதை அமைக்கும் வாய்ப்பு இல்லை என மத்திய நீர்வளத்துறை செயலாளர் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்ற உத்தரவில் இல்லை. எனவே அதை அமைக்கும் வாய்ப்பு இல்லை என மத்திய நீர்வளத்துறை செயலாளர் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கை. காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007-ல் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவு 2013-ல் மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

காவிரி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், தமிழகத்திற்கான நீர் ஒதுக்கீடை 14 டி.எம்.சி குறைத்தது. ஆனால் நடுவர் மன்ற தீர்ப்பின் இதர அம்சங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்யவில்லை. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டதாக தமிழ்நாடு நிம்மதி பெருமூச்சு விட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்து வருகின்றன. நாடாளுமன்றத்தை அதிமுக எம்.பி.க்கள் முடக்கி வருகிறார்கள். இந்தச் சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை என கர்நாடகாவும், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் வருகிற 30-ந் தேதிக்குள் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எழுத்துபூர்வமான கருத்துகனை தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டும் என்று தான் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அதை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சரியான தீர்வாக அமையும் திட்டத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் இந்த நிலைப்பாடு காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் என்பதே கனவுதான் என்கிற சூழல் உருவாகி வருகிறது.

 

×Close
×Close