காவிரி மேலாண்மை வாரியம் : தமிழகத்திற்கு மீண்டும் பின்னடைவு, மத்திய அரசு மனு விசாரணைக்கு ஏற்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய விவகாரத்தில் தமிழ்நாடு பின்னடைவை சந்திக்கிறது. மத்திய அரசு அவகாசம் கேட்ட மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய விவகாரத்தில் தமிழ்நாடு பின்னடைவை சந்திக்கிறது. மத்திய அரசு அவகாசம் கேட்ட மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பித்தது. அதில் குறிப்பிடப்பட்ட ‘ஸ்கீம்’ என்கிற வார்த்தை குழப்பத்தை ஏற்படுத்தியது. ‘ஸ்கீம்’ என குறிப்பிட்டிருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தேவையில்லை என கர்நாடகா வாதிட்டது. தமிழகமோ, ‘நீரின் அளவைத் தவிர மற்ற அம்சங்களில் நடுவர் மன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் மாற்றவில்லை. எனவே ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியம்தான்’ என்றது.

காவிரி தீர்ப்பை அமல்படுத்த உச்சநீதிமன்றம் வழங்கிய 6 வார காலமும் அமைதியாக இருந்த மத்திய அரசு, அவகாசம் முடிந்த மார்ச் 29-ம் தேதி விளக்கம் கேட்டு ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ‘ஸ்கீம்’ என்பது என்ன? காவிரி நடுவர் மன்ற உத்தரவில் கூறியிருப்பது போல மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டுமா? அல்லது மேற்பார்வை குழு என்கிற அளவில் அமைக்கலாமா? கர்நாடகா தேர்தல் நெருங்குவதால் 3 மாத கால அவகாசம் தேவை என்கிற கேள்விகள் மற்றும் கோரிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்தது.

காவிரி தீர்ப்பை உரிய காலத்தில் அமல்படுத்தாத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் கால அவகாச மனுவை ஏற்ககூடாது என்றும் வாதிட்டது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கை ஏப்ரல் 9-ம் தேதி விசாரிப்பதாக நேற்று தெரிவித்தது உச்ச நீதிமன்றம்.

இன்று (ஏப்ரல் 3) மத்திய அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு கோரியபடி அந்த மனு அறிமுக நிலையில் தள்ளுபடி செய்யப்படவில்லை. ஏப்ரல் 9-ம் தேதி தமிழ்நாடு அரசு மனுவுடன் இணைத்து இதையும் விசாரிப்பதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு கூறியது. எனவே மத்திய அரசு மனுவை தள்ளுபடி செய்ய வைக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சி பலிக்கவில்லை.

மத்திய அரசின் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டிருப்பதால், காவிரி மேலாண்மை அமையும் விவகாரம் மேலும் தள்ளிப் போகலாம். இது தமிழ்நாட்டுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

 

×Close
×Close