காவிரி வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. கர்நாடகாவுக்கு மே 15 தேர்தல் ரிசல்ட் என்றால், தமிழகத்தின் தலையெழுத்து மே 14-ல் தீர்மானிக்கப்பட இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கை! இந்தியாவில் இரு மாநிலங்கள் இடையே நதிநீர் பங்கீட்டுக்காக அப்படி சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட வாரியம் அமைக்கப்பட்டு, செயல்பாட்டில் இருக்கின்றன. அப்படி பொதுவான அமைப்பு உருவாக்கப்பட்டால் மட்டுமே, ‘தண்ணீர் திறக்க மாட்டோம்’ என கர்நாடகா செய்கிற சண்டித்தனத்திற்கு முடிவு கிடைக்கும்.
காவிரி நடுவர் மன்றம் இதை கணக்கில் எடுத்துக்கொண்டுதான், மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த 2007-ம் ஆண்டே இறுதி உத்தரவை வழங்கியது. ஆனால் அந்த உத்தரவை அரசிதழில் வெளியிடவே பெரும் சட்டப் போராட்டம் நடத்தி, 2013-ல்தான் அது சாத்தியமானது. இப்போது அதை அமல்படுத்த ‘பஞ்சாயத்து’ நடந்து கொண்டிருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஆர்வமாக இல்லை என்பது அதன் செயல்பாடுகளில் தெளிவாக புரிகிறது. அதனால்தான், ‘ஸ்கீம்’ என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட வார்த்தையை பிடித்துக்கொண்டு மாநில தலைமைச் செயலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
மத்திய அரசு நடத்திய அந்தக் கூட்டத்தில், தங்கள் மாநில அணைகளை பொதுவான அமைப்பிடம் ஒப்படைக்க கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய 3 மாநிலங்களுமே தயாராகவில்லை என தெரிகிறது. இதை அடிப்படையாக வைத்து திங்கட்கிழமை (மே 14) உச்ச நீதிமன்றத்தில் வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதாவது, காவிரியில் தண்ணீர் திறக்கும் உரிமையை கர்நாடகாவிடமே விட்டுவிடுவது என்றும், கண்காணிக்கும் உரிமையை பொதுவான அமைப்பு செய்கிற விதமாகவும் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என டெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அதிகாரம் மிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வரைவு அறிக்கை தாக்கல் செய்யாதபட்சத்தில் தமிழ்நாட்டில் மீண்டும் காவிரி போராட்டம் வெடிக்க வாய்ப்பு இருக்கிறது.
கர்நாடகாவில் தேர்தல் முடிவு வெளியாகும் மே 15-ம் தேதி தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதிலும் மத்திய அரசின் வரைவு அறிக்கை குறித்து விவாதித்து போராட்டத் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மட்டுமல்லாமல், மாநிலத்தின் போராட்டம், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றையும் தீர்மானிக்கும் அம்சமாக மத்திய அரசின் வரைவு அறிக்கை இருக்கப் போகிறது.