காவிரி வழக்கில் 2 வாரம் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு : ‘கர்நாடக தேர்தலுக்கான நடவடிக்கை’ என ஓ.எஸ்.மணியன் புகார்

காவிரி வழக்கில் மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதற்கு தமிழக கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

காவிரி வழக்கில் மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதற்கு தமிழக கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

காவிரி வழக்கில், உரிய செயல் திட்டத்தை சமர்ப்பிக்க மே 3-ம் தேதியை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தது. ஆனால் இன்று (ஏப்ரல் 27) உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிதாக ஒரு கோரிக்கையை முன் வைத்தது. அதாவது, ‘செயல் திட்டத்தை உருவாக்க மேலும் 2 வாரம் அவகாசம் தேவை’ என கோரிக்கை வைத்தார் மத்திய அரசு வழக்கறிஞர்!

காவிரி வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் இந்த கோரிக்கையை வைத்தனர். அதற்கு, ‘உங்கள் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யுங்கள். மே 3-ம் தேதி விசாரிக்கிறோம்’ என நீதிபதிகள் பதில் அளித்தனர். காவிரி வழக்கை தாமதப்படுத்தும் மத்திய அரசின் இந்த முயற்சிக்கு தமிழக கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. இதன் LIVE UPDATES

பிற்பகல் 03.50 : காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையில் 2 வார கால அவகாசம் கேட்டதற்கு கர்நாடக தேர்தல் காரணம் அல்ல என்று கோவையில் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

பிற்பகல் 03.05 : மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு. ‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

பகல் 1.35 : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது. தமிழக அரசு என்ன செய்ய போகிறது?’ என கேள்வி விடுத்தார்.

பகல் 1.30 : தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ‘காவிரி விவகாரத்தில் தகுதியான காரணம் கூறி மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளது’ என்றார்.

பகல் 1.20 : சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன் கூறுகையில், ‘தமிழகத்திற்கு காவிரி நீர் இல்லை என மத்திய அரசு மறைமுகமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’ என்றார்.

பகல் 1.15 : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ‘கர்நாடகாவில் தேர்தல் முடிந்தாலும் காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்காது’ என்றார்.

பகல் 1.00 : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், ‘கர்நாடக தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிப்போடுகிறது. தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.’ என்றார்.

பகல் 12.50 : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இன்று திருச்சி கல்லணையில் தமிழ் அமைப்புகள் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடந்தது. மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து அதில் கடுமையாக விமர்சித்தனர்.

பகல் 12.00 : இயக்குனர் அமீர் இது குறித்து கூறுகையில், ‘இது எதிர்பார்த்த ஒன்றுதான். கர்நாடக தேர்தல் முடியும் வரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது’ என்றார்.

பகல் 11.30 : கடந்த பிப்ரவரி 16-ம் தேதி காவிரி வழக்கில் இறுதி உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம், 6 வாரங்களில் உத்தரவை செயல்படுத்தும் ஸ்கீமை உருவாக்க உத்தரவிட்டது. ஆனால் அந்த அவகாசம் நிறைவுபெறும் நாளான மார்ச் 29 வரை காத்திருந்த மத்திய அரசு, கடைசி நாளில் ‘ஸ்கீம்’ என்பதற்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும் அவகாசமும் கேட்டது.

அந்த அடிப்படையிலேயே மே 3 வரை அவகாசம் வழங்கியது மத்திய அரசு. தற்போது மே 12-ல் நடைபெறும் கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே மத்திய அரசு மேலும் 2 வாரம் அவகாசம் கேட்பதாக தமிழ்நாடு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குறிப்பிட்டார்.

 

 

×Close
×Close