காவிரி வழக்கில் 2 வாரம் அவகாசம் கேட்ட மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றது. அட்டர்னி ஜெனரல் ஆட்சேபனையை தொடர்ந்து வாபஸ் பெற்றதாக தெரிய வந்திருக்கிறது.
காவிரி வழக்கில் மே 3-ம் தேதிக்குள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த ‘ஸ்கீம்’ உருவாக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு இதற்கு மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டு நேற்று (ஏப்ரல் 27) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
காவிரி வழக்கை மேலும் கால தாமதப்படுத்தும் மத்திய அரசின் இந்த முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கர்நாடகா தேர்தலுக்காக இந்த மனுவை மத்திய அரசு தாக்கல் செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
காவிரி விவகாரத்தில் மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டுள்ள மத்திய அரசின் செயலுக்கு தமிழக அரசும் அதிருப்தி தெரிவித்தது. இந்நிலையில் காவிரி வழக்கில் தீர்ப்பை அமல்படுத்த மேலும் 2 வார அவகாசம் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாபஸ் பெற்றது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை தயாரிக்க இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலின் ஆட்சேபணையை அடுத்து மத்திய அரசு அந்த மனுவை வாபஸ் பெற்று உள்ளது. மே 3-ம் தேதி மத்திய அரசின் நிலைப்பாடு அதிகாரபூர்வமாக தெரிய வரலாம்!