காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்த வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு மேல் விசாரணைக்கு வந்தது. மேலும் இவ்வழக்கில் மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி. சிங் ஆஜராகி வரைவு திட்டம் தாக்கல் செய்தார்.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில், தமிழகத்தில் உருவாக்க வேண்டிய காவிரி குழுவுக்கான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான முதல் காலக்கெடு மே 3ம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா தேர்தலைக் காரணம் காட்டி மத்திய அரசு கடமை தவறியது. இதனைக் கண்டித்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து மே 8ம் தேதி வரைவு திட்டம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியது.
அதன்படி மே 8ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அன்று விசாரணை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மத்திய அரசு மீண்டும் கால அவகாசம் கேட்டு கோரிக்கை விடுத்தது. அதில், வரைவு திட்ட அறிக்கை ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியிருந்தது. இதன் விளைவாக இந்த வழக்கை மே 14ம் தேதிக்கு (இன்று) உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
மே 14ம் தேதி நிச்சயம் வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வாரியம், ஆணையம் அல்லது குழு அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இத்தனை நாட்கள் கர்நாடகா தேர்தலைக் காரணம் காட்டி வந்த மத்திய அரசு உறுதி அளித்தபடி இன்று காவிரி வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் இன்று நிகழ்ந்த விவரங்கள்:
காலை 11.56 : திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை மே 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
காலை 11.52 : காவிரி வரைவு திட்ட அறிக்கை குறித்து விளக்கம் அளித்து வருகிறார் மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி. சிங். 14 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காவிரி வழக்கில், ஆணையம், வாரியம் அல்லது குழு அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
காலை 11.47 : காவிரி நீர் பங்கீடு தொடர்பாக வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது மத்திய அரசு. விசாரணை தொடங்கிய நிலையில் காவிரி வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீல் வைத்த கவரில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காலை 10.42 : காவிரி வரைவு திட்ட அறிக்கை தாக்கல் வழக்கு இன்னும் சற்று நேரத்தில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் விசாரசிக்கப்பட உள்ளது.
காலை 10.36 : காவிரி வழக்கில் நீர் வளத்துறை செயலாளர் யு.பி. சிங் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்.