ரஜினிகாந்த் உருவப் பொம்மையை கர்நாடகாவில் எரித்தனர். காவிரிப் பிரச்னையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக கருத்து கூறியதால், கன்னட அமைப்பினர் இதை செய்தனர்.
நடிகர் ரஜினிகாந்த், பூர்வீகமாக கர்நாடகாவை சேர்ந்தவர்! எனவே காவிரி பிரச்னை எழும்போதெல்லாம் தமிழகத்தில் அரசியல் ரீதியாக அவரது தலையை உருட்டி விடுவது வழக்கம். விரைவில் அவர் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் சுழலில் காவிரி தீர்ப்பும் வந்திருப்பதால், ரஜினியின் கருத்து உற்று நோக்கப்பட்டது.
ரஜினிகாந்த் நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காவிரி தீர்ப்பால் தமிழக விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் தருகிறது’ என குறிப்பிட்டார். தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ரஜினிகாந்த், காவிரி விஷயத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதால் அவருக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ரஜினியின் கருத்தைக் கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்தனர். சன்னப்பட்னா நகரில் கன்னட அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினிக்கு எதிராக கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். கர்நாடகாவின் வேறு சில இடங்களிலும் இந்தப் போராட்டம் நடந்தது.