50 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு: 'காவிரி மேலாண்மை ஆணையம்’ அமைக்க நீதிமன்றம் உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மே 14ம் தேதி மத்திய அரசு வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்தது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்களின் பதில்களை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த (மே 16) பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம் இந்த விசாரணையை 11.30 மணிக்கு மேல் நடத்தியது. அப்போது காவிரி குழுவிற்கு “வாரியம்” என்று பெயர் வைக்க 4 மாநிலங்களும் ஒப்புக்கொண்டன. இதற்கு மத்திய அரசும் எவ்வித தடையும் தெரிவிக்கவில்லை. மேலும் ஒவ்வொரு மாநிலம் சார்பாகவும் கோரிக்கைகளை வைக்கப்பட்டது. இதில் ஒரு சில கோரிக்கைகளை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

விசாரணையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தனது கோரிக்கைகளை வைத்தது. அதில்:

– காவிரி குழுவுக்கு “வாரியம்” என்று பெயர் வைக்க வேண்டும்.

– காவிரி அமைப்பிற்குத் தலைமையகம் கர்நாடகத்தில் அமையாமல், டெல்லியில் அமைக்கப்பட வேண்டும்.

– இந்தக் குழுவிற்காக ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகளில் முதல் இரண்டு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், நீதிபதி நியமனம் கோரிக்கையை நிராகரித்தது.

இதே போல கர்நாடக அரசு, “ஒரு சில அம்சங்களைத் தவிர பிற அம்சங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறோம். காவிரி நீரைப் பயன்படுத்த ஒவ்வொரு முறையும் அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரைச் சுதந்திரமாக பயன்படுத்த அனுமதி வேண்டும்.” என்ற கோரிக்கையை முன்வைத்தது. மேலும் “கேரளாவிற்கு 4% நீர் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், 15% செலவுகளை ஏன் ஏற்க வேண்டும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றும் கேரளா கூறியது.

இந்த வழக்கில் மூன்று மாநிலங்களின் கோரிக்கைகளை விசாரித்த உச்சநீதிமன்றம், “காவிரி வரைவு திட்ட அறிக்கையில் உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள மாநிலங்களின் 3 கோரிக்கைகளைத் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்றது. இந்த வழக்கு விசாரணை நேற்று (மே 17) நடைபெற்றது. காவிரி குழு அமைத்தபின் இந்த விவகாரத்தில் தலையிட மத்திய அரசுக்கு அனுமதியில்லை.” என்று திட்டவட்டமாக உத்தரவு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, திருத்தங்கள் செய்யப்பட்ட காவிரி வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு நேற்று(மே 17) தாக்கல் செய்தது மத்திய அரசு. இவை எல்லாவற்றையும்  ஆராய்ந்து பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்  காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று  (மே 18) மாலை 4 மணிக்கு வழங்கப்படும் என உத்தரவிட்டனர். ஆனால் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE UPDATES

பிற்பகல் 3.00 : காவிரி நீர் திறப்பு தொடர்பான முழு அதிகாரமும் ஆணையத்திற்கே இருப்பதாகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அலுவலகம் டெல்லியில் இயங்கும் என்றும் கூறியது தமிழக அரசின் வாதத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. 50 ஆண்டுகால காவிரிப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

பிற்பகல் 3.00 : திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறுகையில், ‘காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

பிற்பகல் 2.55 : காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி ரங்கநாதன் கூறுகையில், ‘காவிரி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். தமிழக அரசின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது’ என்றார்.

பிற்பகல் 2.50 : பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், ‘காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தை கிடப்பில் போட்ட காங்கிரஸ்-திமுக எவ்வளவோ விமர்சனம் செய்தார்கள். கர்நாடகாவில் பாஜக வந்தால் நியாயமான தீர்வும், நீர் பங்கீடும் தமிழகத்திற்கு கிடைக்கும்’ என்றார்.

பிற்பகல் 2.45 : தமிழ்நாடு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ‘காவிரி வழக்கின் தீர்ப்பில் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. தண்ணீர் திறப்பதற்கான முழு அதிகாரமும் ஆணையத்திற்கே உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் ஒன்றுமில்லை; அதிகாரம் இருக்குமா என பார்க்க வேண்டும்’ என்றார்.

பிற்பகல் 2.40 : காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். பருவ காலத்திற்கு முன்னதாக காவிரி வரைவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.

பிற்பகல் 2.35 : மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு இல்லை. மத்திய அரசின் வரைவு அறிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என நீதிமன்றம் கருத்து கூறியது.

பிற்பகல் 2.30 : மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். கர்நாடகம் மற்றும் கேரளாவின் கோரிக்கையை நிராகரித்தது.

பிற்பகல் 2.20 : காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close