காவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் தலைமை அலுவலகம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி கொடுத்தபடி டெல்லியில் இயங்கும்

காவிரி மேலாண்மை ஆணையம் தலைவராக மசூத் ஹூசைன் நியமனம் செய்யப்பட்டார். 9 உறுப்பினர்கள் பட்டியலையும் மத்திய அரசு அறிவித்தது.

காவிரி மேலாண்மை வாரியம் என்பது தமிழ்நாடு விவசாயிகளின் நெடுநாள் கோரிக்கை! காவிரி நடுவர் மன்றம் இதை அமைக்க உத்தரவு பிறப்பித்தது. எனினும் காவிரி வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் நடுவர் மன்றம் பரிந்துரைத்த தண்ணீரின் அளவை குறைத்தது.

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். காவிரி பாசனத்திற்கு உட்பட்ட 4 மாநிலங்களும் மேற்படி ஆணையத்திற்கு தலா ஒரு உறுப்பினரை நியமிக்க வேண்டும். மத்திய அரசின் துறைகளில் இருந்து ஐவரை நியமனம் செய்வதுதான் திட்டம்!

Cauvery Water Management Authority, Chairman Masood Husain

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினரை நியமனம் செய்யாமல் கர்நாடகா தாமதம் செய்தது. எனினும் மத்திய அரசு கர்நாடக அதிகாரி ஒருவரை நியமனம் செய்துகொண்டு தலைவர் உள்ளிட்ட 9 உறுப்பினர்களைக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை இன்று அறிவித்தது.

காவிரி மேலாண்மை ஆணையம் தலைவராக மசூத் ஹூசைன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் மத்திய அரசின் நீர்வள ஆணையராக பணியாற்றுகிறார். கூடுதல் பொறுப்பாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பொறுப்பை ஏற்கிறார்.

காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களாக மத்திய அரசு அதிகாரிகளான மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் நவீன்குமார், மத்திய நீர்வளத் துறை இணைச் செயலாளர், மத்திய வேளாண்துறை விவசாயிகள் நலன் இணைச் செயலாளர், விவசாயிகள் நலன் ஆணையர் ஆகியோர் முழுநேர உறுப்பினர்கள். மத்திய அரசின் மேலும் ஒரு இணைச் செயலாளர் பகுதி நேர உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

கர்நாடகா மாநில பிரதிநிதியாக அந்த மாநில நீர்வளத்துறை நிர்வாக செயலாளர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கேரளா சார்பில் அந்த மாநில நீர்வளத்துறை செயலாளர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி பொதுப்பணி வளர்ச்சி ஆணையர் அன்பரசு, தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

காவிரி மேலாண்மை ஆணையம் தலைமை அலுவலகம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி கொடுத்தபடி டெல்லியில் இயங்கும் என்பதையும் இன்று வெளியிட்ட உத்தரவில் மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close