காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கர்நாடகா- தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இரு மாநில விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் இரு மாநில எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து 3,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஆணையத்தின் இந்த உத்தரவு குறித்து சட்ட வல்லுநர்களுடன் உடனடியாக ஆலோசனை நடத்தப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
குறைந்த மழை பொழிவு
மைசூருவில் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு 3,000 கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து உடனடியாக சட்டக் குழுவிடம் ஆலோசனை நடத்துவோம்.
இங்கு குடிநீருக்குத் தண்ணீர் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழகம் பயிர்களுக்குத் தண்ணீர் கேட்டு வருகிறது. கர்நாடகாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 123 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த மழை பதிவாகியுள்ளது. 100 டி.எம்.சி.அடி தண்ணீர் தேவைப்படும் நிலையில் 50 டி.எம்.சி.டி தண்ணீர் மட்டுமே உள்ளது" என்றார்.
தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு தனது வாதத்தை சரியாக முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதல்வர், கடந்த ஆட்சியின் போது இவ்விவகாரத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் அனில் தவான் மற்றும் அவரது சட்டக் குழுதான் இப்போது வழக்குக்காக ஆஜரானது என்று கூறினார்.
பிரதமர் தலையிட வேண்டும்
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு தீர்ப்புக்கு வெளியே பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றார். மேலும் இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் அரசியல் செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து "எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்துவதற்கு பதிலாக, மாநிலத்தின் 25 கட்சி எம்.பி.க்கள் உட்பட அனைத்து பாஜக தலைவர்களும் மாநிலத்தின் வறட்சி நிலையை மதிப்பிடுவதற்கும், மாநிலத்திற்கு உதவ நிதி பெறுவதற்கும் மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்றார்.
மாநிலத்தில் வறட்சி நிலவரம் குறித்து கர்நாடகாவின் கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.