மத்திய நேரடி வரி ஆணையம் இனி எந்தவொரு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பினை பொதுமக்களுக்கு வெளியிடக் கூடாது என வலியுறுத்தியிருக்கின்றது.
கடந்த நவம்பர் 2017 மற்றும் இவ்வருடம் ஏப்ரல் மாதம் இது குறித்த தகவலினைப் பெற தேர்தல் ஆணையம், நேரடி வரி ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இனி வரும் தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையம், தேர்தலில் போட்டியிடுபவர்களின் சொத்து மதிப்பினை வெளியிடலாமா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இச்சந்தேகத்தினை எழுப்பியது.
இவ்வாறாக சொத்து மதிப்பினை வெளிப்படையாக அறிவிப்பதினால், தேர்தலில் வெற்றிபெறுபவர்கள் மீது மக்களோ அல்லது தோற்றுப் போன அரசியல்வாதிகளோ “தவறான ஆவணங்களை சமர்ப்பித்து தேர்தலில் நின்று இருக்கின்றார்கள் என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் கீழ் புகார் அளிக்க உதவியாக இருக்கும்” என்றும் கூறியுள்ளது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் யாருக்காவது இது தொடர்பான தகவல் தேவைப்படும் போது மறுக்காமல் சொத்து மதிப்புகளை பட்டியலிட வேண்டும் என்றும் கூறியுள்ளது மத்திய நேரடி வரி ஆணையம்.
தேர்தல் ஆணையம் அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களை மக்களுக்கு பார்வையில் வைப்பது சரியானது இல்லை என்று குறிப்பிட்டிருக்கின்றது. வருமான வரி சட்டத்தின் 138 பிரிவுக்கு கீழ் அது குற்றமாக கருதப்படும் என்று கூறிவிட்டது. 2013-ல் இது குறித்து முதலில் சந்தேகம் வந்த போது, தேர்தலில் போட்டியிடுபவர்களின் அசையும் சொத்து மற்றும் அசையா சொத்து என இரண்டினையும் கணக்கில் கொண்டு அதனால் பெறப்படும் வருமானம் சரியாக இருக்கின்றதா என்று சரி பார்த்தால் மட்டும் போதுமானது என்று குறிப்பிட்டிருந்தது.
தேசிய நேரடி வரி ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒப்பந்தப்படி அனைத்து போட்டியாளர்களின் சொத்து மதிப்பும் சரிபார்க்கப்படுவதில்லை. மாறாக சென்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், பான் கார்ட் தகவல்களை அளிக்காமல் இருப்பவர்கள், ஐந்து கோடிக்கும் மேல் அசையும் சொத்துகள் வைத்திருப்பவர்கள் போன்றவர்களின் சொத்து மதிப்புகள் தான் சரிபார்க்கப்படும்.
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஏழு முக்கிய மத்திய அமைச்சர்கள் மற்றும் 257 எம்.எல்.ஏக்களின் சொத்துப்பட்டியல் குறித்த விசாரணையை மேற்கொண்டது நேரடி வரி ஆணையம். என்.ஜி.ஓ அமைப்பு, 26 லோக் சபா மந்திரிகள் மற்றும் 11 ராஜ்ஜிய சபா மந்திரிகள் மற்றும் 257 எம்.எல்.ஏக்களின் சொத்து இரண்டு தேர்தல்களுக்கும் இடையில் உயர்ந்துவிட்டது என்று கூறி தொடர்ந்த வழக்கின் காரணமாக இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.