மணீஷ் சிசோடியா கைது; 'அழுக்கு அரசியல்' என கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
டெல்லி கலால் கொள்கை வழக்கில் மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது அழுக்கு அரசியல் என முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது. சிபிஐ அதிகாரிகளின் 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு சிசோடியாவை ஞாயிற்றுக்கிழமை (பிப்.26) மாலை கைது செய்தனர்.
Advertisment
2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லி மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக சிசோடியா மீது நவம்பர் 25ஆம் தேதியன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் அக்டோபர் 17ஆம் தேதியன்று சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். சிபிஐ முன் ஆஜராவதற்கு முன்னதாக சிசோடியா, “ராகுல் காந்தியை பார்த்து பயப்படாத நரேந்திர மோடி ஒரே ஒரு கட்சியைப் பார்த்துதான் பயப்படுகிறார்.
அது ஆம் ஆத்மி. என்னை சிறையில் அடைப்பார்கள். நான் அதற்கு நான் பயப்பட மாட்டேன். நாங்கள் தொடர்ச்சியாக போராடுவோம். இந்த நாட்டின் எதிர்காலம் கெஜ்ரிவால் மட்டுமே” என்றார். மணீஷ் சிசோடியா கைது தொடர்பாக ட்விட்டரில் இந்தியில் ட்வீட் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “அவர் நிரபராதி… இது கேவலமான அரசியல்” என்று கூறியுள்ளார்.
மேலும், “மணீஷ் கைது நடவடிக்கையால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் அனைத்தையும் புரிந்து கொண்டுள்ளனர். இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/