வாட்ஸ் ஆப்பில் சிறுமிகளை வைத்து ஆபாசப் படங்களை வெளியிட்டு வந்த 119 பேர் கொண்ட கும்பலுக்கு சிபிஐ போலீசார் வலை வீசியுள்ளனர். இந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சிறார்களின் ஆபாச படங்களை வெளியிட்டு வரும் இந்த வாட்ஸ் ஆப் குரூப்பின் நிர்வாகியாக கருதப்படும் நிகில் வர்மா (20) என்ற இளைஞரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். இவர், உத்தரபிரதேச மாநிலம் கன்னஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், பி.காம் படித்துவிட்டு வேலை ஏதும் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. இவர் சிபிஐ விசாரணைக்காக டெல்லி அழைத்து வரப்பட உள்ளார்.
அதேபோல், இந்த வாட்ஸ் ஆப் குரூப்பின் மற்ற நிர்வாகிகளான மும்பையை சேர்ந்த சத்யேந்திர சௌஹான், டெல்லியை சேர்ந்த நஃபீஸ் ரஸா, சாஹித், நொய்டாவை சேர்ந்தவர்களுக்கும் சிபிஐ போலீசார் வலை வீசியுள்ளனர். இதனால், டெல்லி, மும்பை, உத்தரபிரதேசத்தில் சிபிஐ போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறார்களின் ஆபாச படம், ‘கிட்ஸ் ட்ரிபிள் எக்ஸ்’ என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிரப்பட்டு வந்தது. இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, மெக்ஸிகோ, நியூஸிலாந்து, சீனா, நைஜீரியா, பிரேசில், கென்யா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் இந்த குரூப்பில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களின் விவரங்கள் அந்நாட்டுடன் பகிரப்பட்டுள்ளது. அதன் மூலம், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சிறார் ஆபாச படங்களை வெளியிடுவதற்கு, கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட்டதா என சிபிஐ விசாரித்து வருகிறது.