சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தஹில் ரமணி கடந்த 2018-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர் சென்னையில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாகவும், தமிழக அமைச்சர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சிலை திருட்டு தொடர்பான சிறப்பு பெஞ்சை கலைத்ததாகவும், தஹில் ரமணி மீது 2019-ம் ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம், நீதிபதி தஹில் ரமணியை சென்னையிலிருந்து மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்ற பரிந்துரைத்தது. கொலீஜியத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய அவர் கோரிக்கை விடுத்தார். அவர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவர் தலைமை நீதிபதி பொறுப்பை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், நீதிபதி தஹில்ரமணிக்கு எதிரான சி.பி.ஐ விசாரணையின் நிலை குறித்து தி.மு.க எம்.பி சின்ராஜ் மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய பணியாளர்கள் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், "மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் பொதுச் செயலாளரிடமிருந்து கடந்த 26.09.2019 தேதியிடப்பட்ட குறிப்பு சி.பி.ஐ-க்கு அனுப்பபட்டது. அதன்படி விசாரணையில் தஹில்ரமணி எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை. அவர் மீது எந்த குற்றமும் பதிவு செய்யப்படவில்லை" என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/