2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
முக்கிய தலைவர்கள், நீதிபதி ஓ.பி.ஷைனி ஆகியோரின் கருத்து இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
மதியம் 12.45: ”இந்த வழக்கு குற்றவியல் பிரச்சனை அல்ல. அவ்வாறுதான் நீதிமன்றமும் அதனை அணுகியிருக்கிறது”, என அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.
மதியம் 12.40: ”நீதி வெற்றி பெற்றிருக்கிறது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். திமுகவுக்கு இது மிகவும் முக்கியமான நாள். நாங்கள் அனுபவித்த குற்றச்சாட்டுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் இந்த தீர்ப்புதான் பதில்”, என கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதியம் 12.35: “இந்த தீர்ப்பை உற்றுநோக்கி விசாரணை அமைப்புகள் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யும் என நம்புகிறேன்”, எனவும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
மதியம் 12.25: ”ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் ஒவ்வொரு வழக்கும் 2012-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாகவும், நியாயமற்றதாகவும் நிராகரிக்கப்பட்டது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கொள்கை அநியாயமாகவும், இந்தியாவின் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்துவதாகவும் கருதப்பட்டது. அதனால், புதிய கொள்கையை வகுக்குமாறு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கொள்கையால் இழப்பீடு ஏற்பட்டது என்பது தெளிவாக உள்ளது”, என அருண் ஜெட்லி கூறினார்.
மதியம் 12.20: "2ஜி வழக்கு குறித்து அரசியல் ரீதியாக பேச விரும்புகிறேன். காங்கிரஸ் தலைவர்கள், இந்த தீர்ப்பை தங்களுக்கு கிடைத்த பெருமையாக கருதுகின்றனர். மேலும், 2ஜி ஒதுக்கீட்டு கொள்கை நேர்மையான கொள்கை என சான்றிதழ் அளித்ததுபோல் நினைக்கின்றனர்”, என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
மதியம் 12.16: “2ஜி ஒதுக்கீடு கொள்கை ஊழலானது மற்றும் நேர்மையற்றது. இது ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் 2012-ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.”, என செய்தியாளர்களிடம் அருண் ஜெட்லி கூறினார்.
மதியம் 12.15: ”2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பழிசுமத்திய பா.ஜ.க. மன்னிப்பு கேட்க வேண்டும் ”, என முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
மதியம் 12.05: “நான் எதையுடன் தற்பெருமையுடன் கூற தேவையில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராக நடைபெற்ற இந்த பிரச்சாரத்தை, எந்தவித அஸ்திவாரமுமின்றி நீதிமன்றம் தனித்தனியாக பிரகடனம் செய்ததற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்”, என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தீர்ப்பு குறித்து கூறியுள்ளார்.
காலை 11.54: “குற்றப்பத்திரிக்கையில் உள்ள பல தகவல்கள் தவறாக உள்ளன. குறிப்பாக, முன்னாள் நிதி செயலாளர் நுழைவு கட்டணத்தை மாற்றியமைக்க பரிந்துரைத்தார் என்பதும், சில விதிமுறைகளை அ.ராசா நீக்கினார் என்பதும் தவறாக உள்ளது”, என நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்தார்.
காலை 11.52: ”விசாரணையின்போது சாட்சியங்களின் வாய்வழி வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.”, என ஓ.பி.ஷைனி கூறியுள்ளார்.
காலை 11.34: "அரசிடம் வலுவான ஆதாரம் இருந்தால், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும்”, என, அன்னா ஹசாரே தெரிவித்தார்.
காலை 11.05: தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், ”முந்தைய அரசின் உயர்ந்த அளவிலான ஊழல் குற்றச்சாட்டு உண்மையானவை அல்லது சரியானவை அல்ல என்பது தெளிவாகியுள்ளது”, என தெரிவித்தார்.
காலை 11.03: “குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால், அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” ஸ்வான் டெலிகாம் நிறுவன தரப்பு வழக்கறிஞர் விஜய் அகர்வால் தீர்ப்புக்கு பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காலை 11.00: ”என் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றிகள்”, என தீர்ப்புக்கு பின் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கனிமொழி மகிழ்ச்சியாக கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.