/indian-express-tamil/media/media_files/2025/04/05/MLn0UY8X38xTT1D16Vse.jpg)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், ஆறு மாதங்களாக ரகசியமாகக் கண்காணித்து வந்த மத்திய புலனாய்வுத் துறை (CBI) அதிகாரிகள், உதவி தொழிலாளர் ஆணையர் ரமேஷ்குமாரை லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடித்தனர். இந்தச் சம்பவம் புதுச்சேரி அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜெயநகரில் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கூட்டம் நடைபெறும். இந்த அலுவலக அதிகாரிகள் தொழிற்சாலைகளுக்குச் சாதகமாகச் செயல்பட லஞ்சம் வாங்குவதாக சென்னை சிபிஐ அலுவலகத்திற்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் புதுவையில் சில நாட்களாக ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.
தேனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவதற்கு அனுமதி வழங்க, உதவி தொழிலாளர் ஆணையர் ரமேஷ்குமார் ரூ.1.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இறுதியில் ரூ.1 லட்சம் தருவதாகப் பேசப்பட்டுள்ளது. தேனி தனியார் நிறுவனம் புரோக்கர் இளங்கோவின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் பணத்தை மாற்றியுள்ளது. பின்னர், இளங்கோ அந்தப் பணத்தை ரமேஷ்குமாரிடம் கொடுத்துள்ளார்.
லஞ்சப் பணம் கைமாறியபோது, டிஎஸ்பி சேதுமாதவன் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் ரமேஷ்குமாரை கையும் களவுமாகப் பிடித்தனர். அவருக்கு லஞ்சம் கொடுத்த புரோக்கர் இளங்கோவையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரமேஷ்குமார் மற்றும் இளங்கோவிடம் சிபிஐ அதிகாரிகள் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தினர். அதே நேரத்தில், ரமேஷ்குமாரின் ஜெயாநகர் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, 18க்கும் மேற்பட்ட பத்திரங்கள் உட்பட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தச் சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கை புதுச்சேரி அரசு ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.